ராஜபக்ச சகோதரர்களில் ஒருவரான முன்னாள் அமைச்சர் பஸில் ராஜபக்ச தேசியப்பட்டியல் ஊடாக நாடாளுமன்றத்துக்குச் செல்வதற்கான வாய்ப்புகள் இருக்கின்றன என்று அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணி கட்சியை உருவாக்கவும் அதனை வெற்றிப்பாதைக்குக் கொண்டு செல்லவும் முன்னெடுக்கப்பட்ட அனைத்து நடவடிக்கைகளின் பின்னாலும் இருந்து செயற்பட்ட பிரதான நபர் இவரே ஆவார்.
ஆனால், இம்முறை பொதுத் தேர்தலில் அவர் போட்டியிடவில்லை என்பதுடன் தேசியப் பட்டியல் ஊடாகவும் நாடாளுமன்றத்துக்குத் தெரிவாகவில்லை. ஏன் இவர் நாடாளுமன்றத்துக்கு அனுப்பப்படவில்லை என்ற கேள்விகள் எல்லோரிடமும் ஏற்பட்டுள்ளன.
இவர் இட்டைப் பிரஜாவுரிமையைக்கொண்டவர் என்பதனாலேயே தேர்தலில் போட்டியிடவோ அல்லது தேசியப்பட்டியலில் உள்வாங்கப்படவோ இல்லை. எவ்வாறாயினும் விரைவில் அவர்இரட்டைப் பிரஜாவுரிமையை இல்லாது செய்யவுள்ளார் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.
இவர் அவ்வாறாக இரட்டைப் பிரஜாவுரிமையை இல்லாது செய்யும் பட்சத்தில் சட்டச் சிக்கல்கள் எதுவுமின்றி நாடாளுமன்றத்துக்குள் நுழைய முடியும். இதன்படி இவர் தேசியப் பட்டியல் ஊடாக நாடாளுமன்றத்துக்குச் செல்லவுள்ளார் எனவும், அவருக்காகத் தேசியப்பட்டியல் ஆசனத்தை வழங்குவதற்கு தற்போது தேசியப் பட்டியல் ஊடாக நாடாளுமன்றத்துக்குத் தெரிவாகியுள்ள ஒருவர் எவ்வேளையிலும் பதவி விலகத் தயாராக இருக்கின்றார் எனவும் தெரியவருகின்றது.
இதன்படி இவர் தேசியப் பட்டியல் ஊடாக நாடாளுமன்றம் செல்லும் பட்சத்தில் இவருக்கு முக்கிய அமைச்சுப் பதவியொன்றும் வழங்கப்படவுள்ளது எனவும் அறியமுடிகின்றது.