‘பாடசாலை பாடத்திட்டத்தில் சட்டத்தை ஒரு பாடமாகச் சேர்க்க யோசனை’

ஆசிரியர், அதிபர் சம்பள முரண்பாட்டை தீர்ப்பதற்கான அமைச்சரவை உப குழுவின் அறிக்கைக்கு அமைய, பிரதமர், நிதி அமைச்சர் மற்றும் ஆசிரிய தொழிற்சங்கங்களுடன் கலந்துரையாடி தீர்வை வழங்குவதற்கு இம்முறை வரவுசெலவுத்திட்டத்தில் மேலதிகமாக 31 மில்லியன் ரூபாய் உள்ளடக்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சர் தினேஷ் குணவர்தன தெரிவித்தார்.

கல்வி அலுவல்கள் பற்றிய அமைச்சுசார் ஆலோசனைக் குழுக்கூட்டத்திலேயே அமைச்சர் இவ்வாறு குறிப்பிட்டார்.

அதேபோன்று, உயர்தர பெறுபேறுகளுடன் தொடர்புடைய Z Score தற்பொழுது வெளியிடப்பட்டுள்ளதாக அறிவித்த அமைச்சர், ஆசிரியர், அதிபர் சம்பள முரண்பாடு காணப்படும் நிலையில் க.பொ.த. (சாதாரண தர) பெறுபேறுகளை வெளியிடுவதில் இருந்த தடைகள் நீங்கியுள்ளதாகத் தெரிவித்தார்.

மேலும், கொவிட் 19 தொற்று நோய் காரணமாக பிற்போடப்பட்ட க.பொ.த. (உயர் தர) பரீட்சை, தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை மற்றும் க.பொ.த. (சாதாரண தரம்) பரீட்சைகளுக்கான தினங்கள் தற்பொழுது தீர்மானிக்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் குறிப்பிட்டார்.

அதற்கமைய, 2022 ஜனவரி மாதத்தில் தரம் 05 புலமைப்பரிசில் பரீட்சையையும், பெப்ரவரி முதலாம் வாரத்தில் க.பொ.த. (உயர் தரம்) பரீட்சையையும், மே மாதம் 23 ஆம் திகதி க.பொ.த. (சாதாரண தர) பரீட்சையையும் நடத்துவதற்கு தற்பொழுது தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இலங்கையின் சட்டத்தை பாடசாலை பாடத்திட்டத்தில் ஒரு பாடமாக உள்ளடக்குவது தொடர்பான பாராளுமன்ற உபகுழுவினால் நியமிக்கப்பட்ட தொழில்நுட்பக் குழுவின் அறிக்கை இராஜாங்க அமைச்சர் கலாநிதி சுசில் பிரேமஜயந்தவினால் ஆலோசனைக் குழுவின் அனுமதிக்க சமர்ப்பிக்கப்பட்டது.

இதன்போது கருத்துத் தெரிவித்த இராஜாங்க அமைச்சர், பாடசாலை பாடத்திட்டத்தில் தற்போது 6ஆம் தரம் முதல் 9ஆம் தரம் வரை கட்டாயப் பாடமாக உள்ள குடியுரிமைக் கல்வி பாடத்தை இந்த சீர்திருத்தங்களுக்குப் பிறகு சட்டம் மற்றும் குடியுரிமைக் கல்வியாக மாற்ற உத்தேசிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

இத்தொழில்நுட்பக் குழுவின் அறிக்கையின்படி, பாடசாலை பாடத்திட்டத்தில் சட்டத்தை ஒரு பாடமாகச் சேர்ப்பதன் மூலம், மாணவர்களிடையே சட்டம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துதல், சட்டத்துக்கு கீழ்ப்படியாமை மற்றும் தண்டனையின் விளைவுகள் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துதல், சட்டத்தால் பாதுகாக்கப்பட்ட உரிமைகள் பற்றிய புரிதலை ஏற்படுத்துதல், சட்டம் இயற்றுதல் மற்றும் சட்டத்தை நடைமுறைப்படுத்தும் பொறிமுறை தொடர்பில் புரிதலை ஏற்படுத்துதல், ஒரு நாகரிக சமுதாயத்தில் சட்டத்தால் நிறுவப்பட்ட கடமைகள் மற்றும் பொறுப்புகள் பற்றிய புரிதலை ஏற்படுத்துதல் போன்ற திறன்களை வளர்ப்பதற்கு எதிர்பார்க்கப்படுகிறது.

உத்தேச கல்விச் சீர்திருத்தங்களில், சிறுவயது முதல் உயர்தரம் வரை எதிர்பார்க்கப்படும் புதிய கல்விச் சீர்திருத்தங்கள், தொழிற்கல்வி தொடர்பான கல்விச் சீர்திருத்தங்கள் மற்றும் உயர்கல்வி சீர்திருத்தங்கள் என மூன்று பகுதிகளாக தயாரிக்கப்பட்ட கொள்கைக் கட்டமைப்பு தொடர்பான இறுதி அறிக்கை 2020 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் வெளியிடப்பட்டதாக இராஜாங்க அமைச்சர் கலாநிதி சுசில் பிரேமஜயந்த தெரிவித்தார்.

அதில் பொதுக் கல்வி குறித்து எவரும் கருத்து தெரிவிப்பதற்கான டிஜிட்டல் தளம் 2021 மார்ச் 28ஆம் திகதி ஜனாதிபதியின் தலைமையில் வெளியிடப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார். அது தொடர்பில் கிடைக்கப்பெற்றுள்ள 2400 கருத்துக்கள் மற்றும் முன்மொழிவுகளை அடிப்படையாகக் கொண்டு தயாரிக்கப்பட்டுள்ள அறிக்கை தேசிய கல்வி ஆணைக்குழுவுக்கு சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.

இங்கு கருத்துத் தெரிவித்த திறன்கள் அபிவிருத்தி, தொழில் கல்வி, ஆராய்ச்சி மற்றும் புத்தாக்கல் இராஜாங்க அமைச்சர் சீதா அரம்பேபொல, தேசிய பல்கலைக்கழகம் இல்லாத ஒவ்வொரு மாவட்டத்திலும் நகர பல்கலைக்கழகம் ஆரம்பிப்பதற்கு எதிர்பார்ப்பதாக குறிப்பிட்டார்.

Related Articles

Latest Articles