நாடளாவிய ரீதியில் பதிவாகும் எரிவாயு சிலிண்டர்கள் வெடிப்பு சம்பவங்கள் தொடர்பாக உடனடியாக விசாரணைகளை ஆரம்பிப்பதற்கான நடவடிக்கைகளை எரிசக்தி அமைச்சு நடவடிக்கையெடுக்க வேண்டும், எரிவாயுக்கள் தொடர்பில் மக்களுக்கு விழிப்புணர்வு நடவடிக்கைகளையும் முன்னெடுக்க வேண்டுமென இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் உபத் தலைவரும் பிரதமரின் இணைப்புச் செயலாளருமான செந்தில் தொண்டமான் தெரிவித்துள்ளார்.
கடந்த சில தினங்களாக நாடளாவிய ரீதியில் பதிவாகும் எரிவாயு சிலிண்டர்கள் வெடித்து சம்பவங்கள் பதிவாகி வருகின்றன. கடந்த 48 நாட்களில் 11 சம்பவங்கள் இவ்வாறு பதிவாகியுள்ளன. இதனால் எரிவாயுவைப் பயன்படுத்தும் மக்கள் மத்தியில் அச்சம் ஏற்பட்டுள்ளது.
உடனடியாக இதுகுறித்த விசாரணைகளை எரிசக்தி அமைச்சு ஆரம்பிக்க வேண்டும். எரிவாயுக்கள் வெடிப்பதற்கான காரணத்தை கண்டரிவதுடன், எரிவாயுக்கள் குறித்து மக்களுக்கு போதிய விழிப்புணர்வு நடவடிக்கைகளையும் முன்னெடுக்க வேண்டும்.
நாட்டில் பல நிறுவனங்கள் எரிவாயு உற்பத்தியை மேற்கொள்கின்றன. இவ்வாறு வெடிக்கும் எரிவாயுக்ளுக்கு உரிய நிறுவனங்களின் ஊடாக மக்களுக்கான நஷ்டயீட்டையும் பெற்றுக்கொடுக்க வேண்டும்.
அதேபோன்று எரிவாயு கசிவு தொடர்பில் மக்கள் அவதானத்துடன், இருக்க வேண்டும். எரிவாயுக்கள் தொடர்பில் விற்பனை செய்யும் முகவர்கள் நிலையங்களும் உரிய நிறுவனங்களும் முன் பரிசோதனைகளை மேற்கொண்டப் பின்னர் மக்களுக்கு அதனை வழங்க வேண்டும்.
இதேவேளை, எரிவாயுக்களின் தரம் தொடர்பில் நாட்டில் பல சந்தேகங்கள் பல தரப்பாலும் முன்வைக்கப்பட்டுள்ளன. ஆகவே, பக்கச்சார்பற்ற உரிய விசாரணையை இந்த விடயத்தில் மேற்கொண்டு மக்களின் அச்ச நிலையை போக்க வேண்டும் என்பதுடன், அவசரகால நிலைமைகளில் போது பயன்படுத்துவதற்காக தீயை அணைக்கும் எரிவாயுக்களை குறைந்த விலையில் மக்களுக்கு பெற்றுக்கொடுப்பது குறித்தும் கரிசனை செலுத்தப்பட வேண்டுமென செந்தில் தொண்டமான் தெரிவித்துள்ளார்.