ஐக்கிய தேசியக் கட்சிலிருந்து வெளியேறியுள்ள முன்னாள் அமைச்சர் அர்ஜுன ரணதுங்க, அடுத்த ஜனாதிபதித் தேர்தலில் பொது வேட்பாளராக களமிறங்கும் விருப்பத்தை வெளியிட்டுள்ளார். அதற்கான அரசியல் மட்டத்திலான கலந்துரையாடல்களையும் ஆரம்பித்துள்ளார்.
2019 ஜனாதிபதித் தேர்தலின் பின்னர் ஐக்கிய தேசியக்கட்சி இரண்டாக பிளவுபட்டது. சஜித் தலைமையில் புதிய கட்சி உதயமானது. எனினும், அர்ஜுன ரணதுங்க, நவீன் திஸாநாயக்க, தயாகமகே போன்றவர்கள் ரணில் பக்கம் நின்றனர். பொதுத்தேர்தலில் யானை சின்னத்தில் களம் கண்டனர்.
எனினும், வரலாறு காணாத தோல்வி ஏற்பட்டது. இதனையடுத்து கட்சி உடன் மறுசீரமைக்கப்பட வேண்டும் என்ற வலியுறுத்தலை அர்ஜுன ரணதுங்க விடுத்துவந்தார். இதன்படி சில மறுசீரமைப்புகள் இடம்பெற்றாலும் கட்சித் தலைமைப்பதவியில் மாற்றம் வரவில்லை. செயலாளர் உள்ளிட்ட முக்கிய பதவிகள் ரணிலின் விசுவாசிகளிடமே இருந்தது.
இதனால் கடும் அதிருப்தியில் இருந்த அர்ஜுன ரணதுங்க, கட்சியின் அடிப்படை உறுப்புரிமை உட்பட அனைத்து பதவிகளையும் துறந்து, கட்சி தலைமைக்கு கடிதம் அனுப்பிவைத்துள்ளார்.
ஐக்கிய மக்கள் சக்தியில் இணையுமாறு ரணதுங்கவுக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தாலும், மக்கள் இயக்கமொன்றை பலப்படுத்துவதே அவரின் எதிர்ப்பார்ப்பாக இருக்கின்றது. இதன்படி கருஜயசூரிய தலைமையிலான சமூக நீதிக்கான மக்கள் இயக்கத்துடன் இணைந்து பயணத்தை ஆரம்பிக்கலாம் எனவும்,
அவ்வாறு இல்லாவிட்டால் சம்பிக்க ரணவக்கவின் ‘43’ என்ற அரசியல் இயக்கத்துடன் இணைந்து பயணிக்கலாம் எனவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. அவ்வாறு இல்லாவிட்டால் புதியதொரு இயக்கத்தை அர்ஜுன ரணதுங்க கட்டியெழுப்பக்கூடும் என எதிர்ப்பார்க்கப்படுகின்றது.
கெப்டன் கூல் என போற்றப்படும் ரணதுங்க தலைமையிலேயே 1996 இல் இலங்கை அணி உலகக் கிண்ணம் வென்றது. எனவே, சம்பிக்கவின் 43 இயக்கம் ஊடான அவரின் பயணம் வெற்றியளிக்குமா என்ற வினாவும் எழுந்துள்ளது. சிலவேளை, எவரும் எதிர்பாராத விதத்திலான முடிவொன்றைக்கூட அவர் எடுக்கலாம் எனவும் அரசியல் களத்தில் கதை அடிபடுகின்றது.