நற்பிரஜைகளை உருவாக்கித் தருகின்ற அற்புத பணியை பாடசாலைகள் மேற்கொண்டு வருகின்றன. அறிவை விருத்தி செய்துவதற்காக தமது பிள்ளைகளை பாடசாலைக்கு அனுப்பி வைக்கும் பெற்றோர்களிடம் தமது பிள்ளைகளுக்கான பாதுகாப்பை பாடசாலை நிர்வாகம் பொறுப்பேற்கும் எனும் நம்பிக்கை அதிகம் காணப்படுகின்றது.
இத்தகைய நிலையில் மண்சரிவுக்குள் தம் பிள்ளைகள் சிக்குண்டு விடுவார்களோ எனும் அச்சத்துடனேயே இரத்தினபுரி இறக்குவானை டிப்டீன் தமிழ் பகுதி மக்கள் வாழ்ந்து வருகின்றனர்.
இரத்தினபுரி நிவித்திகல கல்வி வலயத்திற்குட்பட்ட டிப்டீன் தமிழ் வித்தியாலயம் இறக்குவானை பகுதியில் அமைந்துள்ளது. இங்கு முதலாம் தரம் முதல் ஒன்பதாம் தரம் வரையான வகுப்புகளுடன் அதிபர் உட்பட எட்டு ஆசிரியர்களும் கடமையாற்றி வருகின்றனர். இத்தகைய மனித வளம் செறிந்து செயற்படுகின்ற இப்பாடசாலையை சுதந்திரமாக இயங்குவதற்கு பொருத்தமற்ற பகுதியாக பொதுமக்கள் கருதுகின்றனர்
கடந்த காலங்களில் பாடசாலைக் கட்டடங்கள் அமைந்துள்ள 100 மீட்டர் சுற்று வட்டார பகுதியில் சட்டவிரோத மாணிக்கக்கல் அகழ்வுகள் இடம்பெற்றுள்ளன. இதற்காக வெட்டப்பட்ட குழிகளினால் மண்சரிவு அபாயம் ஏற்பட்டுள்ளது. அக் குழிகளில் நீர் தேங்கி நீரின் அமுக்கம் அதிகரிப்பதனால் பாடசாலைக் கட்டடங்கள் மண்ணுக்குள் புதையுறும் ஆபத்து அதிகமாக உள்ளதாக தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவன அதிகாரிகள் தெரிவித்துள்ளனர.;
பாடசாலை கட்டடங்களுக்கு அருகில் மண்மேடுகள் மழைக் காலங்களில் சரிந்து விழுவதும் கட்டடங்கள் நாளுக்கு நாள் இறங்குவதும் மாணவர்களாலும் ஆசிரியர்களாலும் அவதானிக்கப்பட்டுள்ளது. இப் பகுதியை சுற்றிலும் பல வெடிப்புகள் காணப்படுகின்றன.
பாடசாலையின் முன்னாள் அதிபர் இது தொடர்பாக உரிய அதிகாரிகளுக்கு தெரியப்படுத்தியதற்கு இணங்க அப்பகுதியை விட்டு வெளியேருமாறு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்
வலயக்கல்வி பணிப்பாளரும் பிரதேச சபை உறுப்பினர்களும் தற்காலிகமாக வைத்தியசாலை கட்டடம் ஒன்றை கற்றல் கற்பித்தல் நடவடிக்கைகளுக்கு பயன்படுத்துமாறு அறிவித்தனர். வைத்தியசாலை சுற்றாடலும் ஏற்கனவே மாணிக்கக்கல் அகழ்வில் பாதிப்புக்குள்ளாகியுள்ளதாக அவ்விடமும் புறக்கணிக்கப்பட்டது.
மாணவர்களுக்கான கற்றல் கற்பித்தல் செயல்பாடுகள் தடைப்படுவதனால் விகாரையை அண்மித்த பகுதிக்கு செல்லலாம் என தீர்மானித்த போது, அவ்விடமும் பாதுகாப்பு அற்ற இடமாக காணப்பட்டதால் அதுவும் அமையாமல் போய்விட்டது. கிராம மக்கள், பொது மக்களின் பிரயத்தனத்தால் டிப்டீன் ஆலயத்திற்கு அருகிலுள்ள மண்டபம் ஒன்று தற்காலிகமாக பெற்றுக் கொடுக்கப்பட்டது.
அந்த இடத்தில் 19 இட்சம் நிதி ஒதுக்கீட்டில் கட்டடம் அமைத்து தருவதாக வலயக்கல்வி பணிப்பாளர் கூறியிருந்தாலும் கூட,பாடசாலை நிர்வாகத்தின் அசமந்த போக்கால் இன்று வரையில் தற்காலிக கட்டடத்திற்கான வேலைத் திட்டங்கள் கூட ஆரம்பிக்கப்படவில்லை.
இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் உப செயலாளர் ரூபன் பெருமாளிடம் இவ்விடயம் தொடர்பில் பாடசாலை ஆசிரியர் கலந்துரையாடியுள்ளார். தோட்ட முகாமையாளரும் இவ்விடயம் குறித்து மிகவும் அலட்சியமாக செயற்படுவதாக தெரிவிக்கப்படுகிறது.
ஹபுகஸ்தென்ன பெருந்தோட்ட நிர்வாகம் பாடசாலைக்கான காணியை வழங்குவது தொடர்பில் முழுமையான ஈடுபாட்டை கொண்டிருக்கவில்லை. தோட்ட முகாமையாளர் இரண்டு ஏக்கர் காணியை வழங்குவதாக கூறினாலும் அக்காணி காட்டுப் பகுதியிலும், வயல் நிலங்களிலுமே காணப்படுவதாக பெற்றோர்கள் ஆதங்கப்படுகின்றனர்.
இவ்வாறு வழங்கப்படும் காணிகளில் காட்டு யானைகளின் நடமாட்டமும் வயல் நிலங்களில் நீர் தேங்கும் நிலையும் காணப்படுகின்றது. இச்செயல் ‘வெந்த புண்ணில் வேலைப் பாய்ச்சுவது’ போன்றதாகும். பாடசாலைக்கான பொருத்தமான காணி வேண்டுமாயின் பாராளுமன்ற உறுப்பினரின் பரிந்துரை தேவைப்படுகின்ற நிலையில் அவ் அறிக்கையை வழங்குவதிலும் கால தாமதம் ஏற்படுகின்றது.
பாராளுமன்ற உறுப்பினர்களை தொடர்பு கொண்டு பாடசாலை விடயம் தொடர்பில் தெளிவுபடுத்தினாலும் அவர்களும் கரிசனை காட்டுவதாக தெரியவில்லை.அதுவும் இந்த பாடசாலை ஒரு பின்தங்கிய பகுதியில் காணப்படுவதால் அரசியல் வாதிகளும் பாராமுகம் காட்டுவதற்கு காரணமாக இருக்கலாம். அல்லது அரசியல் இலாபம் இல்லாததால் பாராளுமன்ற உறுப்பினர்கள் இவ் விடயத்தை கையில் எடுப்பதில்லை என தோன்றுகிறது.
கொரோனா பெரு தொற்றால் மூடப்பட்டிருந்த பாடசாலைகள் திறக்கப்பட்டதன் பின்னரும் இறக்குவானை டிப்டீன் பிரதேச மாணவர்கள் கொரோனா அபாயத்திலிருந்து மீண்டு பாடசாலை என்ற அபாயவட்டத்திற்கு செல்கின்றனர். மில்லியன் தொகை பணச் செலவில் போக்குவரத்துச் சாலைகளும், சொகுசு ஹோட்டல்களும் நிர்மாணிக்கப்படுகின்ற இந்நாட்டில் தான் தமது அடிப்படை தேவைகளை கூட பூர்த்தி செய்துக் கொள்ள இயலாத மக்களும் வாழ்ந்து வருகின்றனர்.
இப் பகுதிகளில் தொடர்ந்து பெய்து வரும் மழை காலத்திலும் தமக்கான பொருத்தமான கட்டட வசதிகள் இன்றி மாணவர்கள் கல்வி பயின்று வருகின்றனர். மண்மேடு சரிந்து விழுவதால் இறந்துவிடுவோமோ அல்லது மண்ணுக்குள் புதையுண்டு போய் விடுவோமோ என்ற அச்சத்துடனேயே அன்றாடம் பாடசாலை கட்டட கதவுகளை திறக்கும் இவர்களுக்கு வெளிச்சம் தருவது யார்?தீர்வு தருவது யார்?
எஸ்.எம்.தர்ஷினி
நன்றி – தினகரன்