” ரஞ்சன் ராமநாயக்க சிறையில் இருக்க வேண்டிய நபர் கிடையாது. எனவே, அவரின் விடுதலைக்காக ஜனநாயக வழியில் மேற்கொள்ள வேண்டிய அனைத்து நடவடிக்கைகளையும் நாம் மேற்கொள்வோம்.” – என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.
சிறைதண்டனை அனுபவித்துவரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்கவை சந்திப்பதற்காக நேற்று வெலிக்கடை சிறைச்சாலைக்குச்சென்ற எதிர்க்கட்சித் தலைவர், சிறைச்சாலை வளாகத்தில் வைத்து ஊடகங்களிடம் கருத்து வெளியிடுகையிலேயே அவ்வாறு கூறினார். இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,
” ஊழல், மோசடிகளுக்கு எதிராகவும், நல்லாட்சிக்காகவும் குரல் கொடுத்து துணிகரமாக போராடியவர்தான் ரஞ்சன் ராமநாயக்க. மக்களின் உரிமைகளைக் காக்க முன்னின்று செயற்பட்டவர். அதனால்தான் மக்களின் மனங்களிலும் மனங்களிலும் குடிகொண்டுள்ளார். எனவே, அவர் சிறையில் இருக்க வேண்டிய நபர் கிடையாது. கொலை அல்லது கொள்ளையடித்துவிட்டு சிறைக்கு சென்றவரும் கிடையாது. அதனால்தான் சர்வதேச நாடாளுமன்ற ஒன்றியம்கூட ரஞ்சனின் விடுதலையை வலியுறுத்துகின்றது.
ரஞ்சன் ராமநாயக்கவுக்கு பொதுமன்னிப்பு வழங்குமாறு நான் ஜனாதிபதியிடம் பல தடவைகள் கோரிக்கை விடுத்துள்ளேன். சாதகமான பதில் கிடைக்கும் என நம்புகின்றோம். ரஞ்சன் ராமநாயக்க முழுமையான ஜனநாயக உரிமைகளுடன் விடுவிக்கப்பட வேண்டும் என கேட்டுக்கொள்கினறேன். அதேபோல அவரின் விடுதலைக்காக ஜனநாயக வழியில் போராடுவோம்.” – என்றார்.










