எரிபொருள் விலை அதிகரிக்கப்பட்டாலும் நாட்டின் தற்போதைய சூழ்நிலையில் பஸ் மற்றும் ரயில் கட்டணங்களில் அதிகரிப்பு ஏற்படுத்தப்படமாட்டாதென போக்குவரத்து இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம தெரிவித்தார்.

நூற்றுக்கு 15 லிருந்து 20 வீதம் வரை பஸ் கட்டணங்களை அதிகரிக்க வேண்டுமென தனியார் பஸ் உரிமையாளர் சங்கம் கோரியுள்ளபோதும் இவ்வாறான சூழ்நிலையில் பஸ் கட்டணங்களை அதிகரிப்பது சிறந்ததல்லவென்றும் இராஜாங்க அமைச்சர் தெரிவித்துள்ளார்.
அத்தியாவசிய உணவுப் பொருட்களின் விலைகள் அதிகரித்துள்ளதால் மக்கள் பல்வேறு அசௌகரியங்களை எதிர்நோக்கி வருகின்றனர்.
இத்தகைய சூழ்நிலையில் பஸ் கட்டணங்களை அதிகரிப்பது அவர்கள் மீது மேலும் சுமைகளை சுமத்துவதாக அமையும். பஸ் வண்டிகளுக்காக நிவாரணங்களை வழங்கும் வேலைத்திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளதுடன் விசேட நிவாரணப் பொதியொன்றும் எதிர்காலத்தில் அறிமுகப்படுத்தப்படும் என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்










