2022 மார்ச்சில் இந்நாட்டில் உணவு நெருக்கடி ஏற்படும் என ஶ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் தலைவரும், முன்னாள் ஜனாதிபதியுமான மைத்திரிபால சிறிசேன எச்சரிக்கை விடுத்துள்ளார்.
அத்துடன், ஊழல் மோசடிகள் மற்றும் ஆட்சி அதிகாரம் ஒரு சிலரின் கைகளுக்குள் இருப்பதால் இந்நாட்டுக்கு சர்வதேச ஒத்துழைப்பு கிடைக்காது எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,
” சர்வதேச நாணய நிதியத்தை நாடவே மாட்டோம் என ஆளுந்தரப்பில் உள்ள சிலர் அறிவிப்புகளை விடுத்துவருகின்றனர். நான் ஜனாதிபதியாக இருந்தபோது சர்வதேச நாணய நிதியத்துடன் இணைந்து செயற்பட்டேன். எனினும், அவ்வமைப்பால் கடும் நிபந்தனைகள் விதிக்கப்படவில்லை. அவ்வாறு விதிக்கப்படும் நிபந்தனைகளில் ஏதேனும் சிக்கல் இருப்பின் செயற்படுத்த முடியாதென வெளிப்படையாக அறிவித்துவிடுவேன். பேச்சுமூலம் உரிய வகையில் தீர்வு எட்டப்படும்.
நான் ஜனாதிபதியா இருந்தபோது விதிக்கப்படாத நிபந்தனைகள் இந்த அரசுக்கு விதிக்கப்படும் என்பது எனக்கு தெரியும். ஏனெனில் ஜனநாயகத்துக்கு அச்சுறுத்தலான விடயங்கள் இடம்பெறும்போது சர்வதேச சமூகம் உதவாது.ஊழல் மோசடிகள், ஆட்சி அதிகாரம் ஓரிருவரின் கைகளுக்குள் இருக்கும்வரை நாம் மீள்வதற்கு எவரும் உதவமாட்டார்கள்.
மார்ச், ஏப்ரல் ஆகும்போது உணவுக்கு நெருக்கடி ஏற்படும். ” – என்றார்.










