குரங்குகளுக்கு கருத்தடை

குரங்குகளுக்கு கருத்தடை செய்யும் வேலைத்திட்டமொன்று மாத்தளையில் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக மாத்தளை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் மாவட்ட அபிவிருத்திக் குழுத்தலைவருமான நாலக்க கோட்ட கொட தெரிவித்தார்.

விவசாய நிலங்களை நாசமாகி மக்களுக்கு தொல்லை தரும் குரங்குகளின் பெருக்கத்தை கட்டுப்படுத்துவதற்காகவே இந்த வேலைத்திட்டம் கொண்டுவரப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.

இதுதொடர்பில் அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில்,

அண்மைக்காலமாக நகர் மற்றும் கிராமப்புறங்களில் குரங்குகளின் எண்ணிக்கை சடுதியாக அதிகரித்து காணப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது.

குரங்குகளினால் தென்னை, வாழை, பழமரங்கள் என்பவற்றை பாழ்படுத்தியும் விவசாய நிலங்களில் பயிரிடப்பட்டுள்ள பயிர்கள் கிழங்கு, மரக்கறி வகைகளையும் கூட்டமாகச் சென்று அவற்றை சேதப்படுத்தி வருவதோடு வீடுகளுக்குள் புகுந்து பொருட்களையும் எடுத்துச் செல்வதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

மேலும் குரங்குகளின் தாக்குதலுக்கு இலக்காகி பலர் காயமடைந்து வரும் சம்பவங்களும் அடிக்கடி இடம்பெற்று வருவதாக பிரதேசவாசிகள் முறைப்பாடு செய்து வருகின்றனர்.

இவற்றைக் கருத்திற்கொண்டு துரிதமாக பெருகிவரும் குரங்குகளின் பெருக்கத்தை கட்டுப்படுத்துவதற்காக குரங்குகளுக்கு கருத்தடை செய்யும் வேலைத்திட்டம் முதற்கட்டமாக மாத்தளை மாவட்டத்தில் முன்னெடுக்கப்படவுள்ளது.

இவ்வாறு குரங்குகளை கருத்தடை செய்வதன் மூலம் எதிர்வரும் இரண்டு வருடங்களுக்குள் பெருகி வரும் குரங்குகளின் எண்ணிக்கை பாரிய அளவில் கட்டுப்படுத்த முடியும். இத்திட்டத்திற்கான நிதி உதவியை தனது பன்முகப்படுத்தப்பட்ட நிதியிலிருந்து ஒதுக்கப்பட்டுள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் நாலக்க கோட்ட கொட மேலும் தெரிவித்தார்.

Related Articles

Latest Articles