ஐ.பி.எல். ரி-20 லீக் தொடரில் விளையாடுவதற்காக மும்பை இந்தியன்ஸ் அணியின் முன்னணி வேகப்பந்து வீச்சாளர் லசித் மாலிங்க, ஐக்கிய அரபு அமீரகத்துக்கு பயணம் செய்ய மாட்டார் என தெரிவிக்கப்படுகின்றது.
மும்பை அணியின் நட்சத்திர வீரராக திகழும் மாலிங்க, இதனால், ஐ.பி.எல். தொடரின் ஆரம்ப போட்டிகளை தவறவிடுவார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மாலிங்கவின் தந்தை உடல்நிலை சரியில்லாமல் இருப்பதால் அவருக்கு அறுவை சிகிச்சை செய்ய வேண்டியிருக்கும் என்பதால், அவர் ஒரிரு வாரங்களுக்கு பிறகு இத்தொடரில் பங்கேற்பார் என கூறப்படுகின்றது.
இருப்பினும், மாலிங்க கொழும்பில் தனது பந்து வீச்சு பயிற்சிகளை மேற்கொள்வார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மும்பை இந்தியன்ஸ் பந்துவீச்சில் மிக முக்கிய வீரரான மாலிங்க, மும்பை அணி கடந்த முறை, நான்காவது சம்பியன் பட்டத்தை வெல்வதற்கு மிக முக்கிய காரணமாக திகழ்ந்தார்.
சென்னை சுப்பர் கிங்ஸ் அணிக்கெதிரான இறுதிப் போட்டியில், முதல் மூன்று ஓவர்களில் 42 ஓட்டங்களை விட்டுக்கொடுத்த மாலிங்க, கடைசி பந்தில் இரண்டு ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி என்ற நிலையில், ஷர்துல் தாக்கூரை எல்.பி.டபிள்யூ முறையில் ஆட்டமிழக்க செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்தியன் பிரீமியர் லீக்கின் (ஐபிஎல்) 13ஆவது அத்தியாத்தம், செப்டம்பர் 19ஆம் திகதி முதல் நவம்பர் 10ஆம் திகதி வரை ஐக்கிய அரபு அமீரகத்தில், அபுதாபி, ஷார்ஜா மற்றும் டுபாய் ஆகிய மூன்று இடங்களில் நடைபெறவுள்ளது.