சட்டபூர்வமான மனைவிக்கு குழந்தைகளையும், சொத்துக்களையும் எடுத்துச் செல்லும் உரிமை மனைவிக்கு உண்டு என்று கொழும்பு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
மனைவி தனது இரண்டு பிள்ளைகளுடன் 20 மில்லியன் ரூபா பெறுமதியான சொத்துக்களுடன் தப்பிச் சென்றுவிட்டதாக கணவர் ஒருவர் தாக்கல் செய்த வழக்கை விசாரித்த போது நீதிமன்றம் இந்தத் தீர்ப்பை வழங்கியுள்ளது.
இதுகுறித்து விசாரணை செய்து, முல்லேரியா பொலிஸார் நீதிமன்றத்தில் அறிக்கை சமர்ப்பித்திருந்தனர். இதனை ஆராய்ந்த கொழும்பு மேலதிக நீதவான் சந்திம லியனகே இந்த தீர்ப்பை அறிவித்தார்.
47 பவுன் தங்கம் மற்றும் 140 லட்சம் ரூபாவிற்கும் அதிகமான பணத்துடன் தனது மனைவி பிள்ளைகள் இருவருடன் தப்பி சென்றுள்ளதாக முல்லைரியா பிரதேசத்தை சேர்ந்த பிரபல சோதிடர் முறையிட்டுள்ளார்.
முறைப்பாட்டிற்கமைய, இரண்டரை வயது மற்றும் ஒன்றரை வயது குழந்தைகளை அவரது மனைவி தன்னுடன் அழைத்துச் சென்றுள்ளதாக முல்லேரியா பொலிஸார் தெரிவித்தனர்.
இவ்வாறு பொருட்களை கொள்ளையடித்த மனைவி வெளிநாடு செல்ல முயற்சித்து வருவதாக நீதிமன்றத்திற்கு கணவர் சார்பில் முன்னிலையான சட்டத்தரணி தெரிவித்துள்ளார்.
இதனால் அவரது வெளிநாட்டு பயணங்களை தடை செய்யுமாறு நீதிமன்றத்தில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
எனினும், இவற்றை ஆராய்ந்த நீதிமன்றம், சட்டப்பூர்வமான மனைவிக்கு, குழந்தைகளையும் சொத்துக்களையும் எடுத்துச் செல்ல உரிமை உண்டு எனவும், அதன் விளைவாக அவர் வெளிநாடு செல்வதைத் தடை செய்ய சட்டப்பூர்வ ஆதாரம் இல்லை எனவும், கூறிய நீதவான் அந்தக் கோரிக்கையை நிராகரித்துள்ளார்.