உக்ரைன் போருக்கு எதிராக ரஷ்யாவில் போராட்டத்தில் ஈடுபட்ட நூற்றுக்கணக்கானோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
உக்ரைன் மீதான ஆக்கிரமிப்புக்கு எதிராக நடைபெற்ற பேரணியில் ஈடுபட்ட சுமார் ஆயிரத்து 400 ஆர்ப்பாட்டக்காரர்களை ரஷ்ய பொலிஸார் கைது செய்துள்ளனர் என தகவல் வெளியாகியுள்ளது.
ஏற்கனவே 51 நகரங்களில் ஆயிரத்து 391 பேர் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர் என்றும், எதிர்க்கட்சி பேரணிகளில் கைது செய்யப்பட்டவர்களைக் கண்காணிப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மாஸ்கோவில் 700 இற்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டதாகவும், இரண்டாவது பெரிய நகரமான செயின்ட் பீட்டர்ஸ்பர்க்கில் சுமார் 340 பேர் கைது செய்யப்பட்டதாகவும் கண்காணிப்பு அதிகாரிகள் தெரிவித்தனர். உக்ரைன் மீது புதின் தாக்குதலைத் தொடங்கியதை அடுத்து, பல ரஷ்ய ஆர்வலர்கள் சமூக ஊடகங்களில் மக்கள் வீதிக்கு வருமாறு அழைப்பு விடுத்தனர்.
ரஷ்ய அதிபர் புதினுக்கு எதிராக மிகப்பெரிய போராட்டங்களை முன்னெடுத்து, சிறையில் அடைக்கப்பட்ட எதிர்க்கட்சித் தலைவர் அலெக்ஸி நவல்னி, மாஸ்கோவிற்கு வெளியே உள்ள ஒரு தண்டனைக் காலனியில் இரண்டரை ஆண்டுகள் சிறைத்தண்டனை அனுபவித்து வருவது குறிப்பிடத்தக்கது.