இலங்கை அரசியல் வரலாற்றில் மூன்று தசாப்தங்களுக்கு பிறகு இரு புதிய அரசியல் கட்சிகளின் ‘அரசியல் அதிகார போட்டி’க்கு மத்தியிலேயே இம்முறை மாகாணசபைகளுக்கான தேர்தல் நடைபெறவுள்ளது.
இலங்கையில் 1988 ஏப்ரல் 28 ஆம் திகதியே முதன்முதலாக மாகாணசபைத் தேர்தல் நடத்தப்பட்டது. வடமேல், வடமத்திய, ஊவா, சப்ரகமுவ ஆகிய மாகாண சபைகளுக்கே அத்தினத்தில் தேர்தல் இடம்பெற்றது.
அத்தேர்தலில் களமிறங்கி ஆட்சி அதிகாரத்தைக் கைப்பற்றிய ஐக்கிய தேசியக்கட்சி நடைபெற்று முடிந்த பொதுத்தேர்தலில் வரலாறுகாணாத தோல்வியை சந்தித்தது.
இதனால் ‘ஆளும்கட்சி’ மற்றும் ‘பிரதான எதிர்க்கட்சி’ என்ற இரு அந்தஸ்த்துகளையும் அக்கட்சி இழந்துள்ளது. எனவே, மாகாணசபைத் தேர்தலில் ‘பிரதான’ எதிர்க்கட்சி என்ற அடிப்படையில் ஐக்கிய மக்கள் சக்தியே இம்முறை களமிறங்கவுள்ளது.
(சிலவேளை ஐக்கிய மக்கள் சக்தியும், ஐக்கிய தேசியக் கட்சியும் இணைந்து யானை சின்னத்தின்கீழ் போட்டியிட்டால்கூட அது புதிய கூட்டணியாகவே அமையும்)
1988 இல் நடைபெற்ற பொதுத்தேர்தலை ஶ்ரீலங்கா சுதந்திரக்கட்சி புறக்கணித்திருந்தாலும் அதன்பின்னர் நடைபெற்ற தேர்தல்களில் அக்கட்சி போட்டியிட்டது.
மாகாணசபைகளின் ஆட்சி அதிகாரத்தையும் ஶ்ரீலங்கா சுதந்திரக்கட்சி தலைமையிலான கூட்டணி கைப்பற்றியிருந்தது. கடைசியாக நடைபெற்ற தேர்தலில்கூட வடக்கு, கிழக்கு மாகாணங்களைத்தவிர ஏனையவற்றை சுதந்திரக்கட்சி தலைமையிலான ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியே கைப்பற்றி ஆட்சியமைத்தது.
எனினும், அக்கட்சியும் இன்று ‘ஆளும்கட்சி, ‘பிரதான எதிர்க்கட்சி’ என்ற அந்தஸ்த்தை இழந்துள்ளது. மொட்டு கட்சியுடன் இணைந்தே போட்டியிட உத்தேசித்துள்ளது. ஆகவே, ஆளுங்கட்சி என்ற அந்தஸத்துடன் ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவே போட்டியிடவுள்ளது.
கடைசியாக நடைபெற்ற தேர்தலில் வடக்கு மாகாணசபையின் ஆட்சி அதிகாரம் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிடமும், கிழக்கு மாகாணசபையின் அதிகாரம் ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸிடமும் இருந்தது.
அதேவேளை, 2021 முற்பகுதியில் மாகாணசபைகளுக்கான தேர்தலை ஒரே நாளில் நடத்துவதற்கு அரசாங்கம் திட்டமிட்டுள்ளது. பழைய முறைப்படியே தேர்தல் நடத்தப்படும். அதற்கேற்றவிதத்தில் சட்டத்திருத்தமும் மேற்கொள்ளப்படவுள்ளது.