தற்போது நிலவும் மருந்து தட்டுப்பாட்டிற்கு மத்தியில் மருந்துகளின் விலைகள் பாரியளவில் அதிகரிக்கப்பட்டுள்ளதாக ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினரான ரோஹண பண்டார தெரிவித்துள்ளார்.
இன்று பாராளுமன்றத்தில் உரையாற்றும் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.
நீண்டகாலமாக மருந்துகளை பெற்றுக்கொள்ளும் நோயாளர்கள் சிரமங்களை எதிர்நோக்குவதாகவும் அவர் தெரிவித்தார்.
குறைந்த வருமானம் பெறுவோருக்கு சலுகை விலையில் மருந்துகளை கொள்வனவு செய்வதற்கான செயல்முறையொன்றை சுகாதார அமைச்சினால் உருவாக்க முடியுமா எனவும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.
டொலரின் பெறுமதி உயர்வை கருத்திற்கொண்டு மருந்துகளின் விலையை அதிகரிக்க தனியார் துறைக்கு அமைச்சு அனுமதி வழங்கியுள்ளதாக இராஜாங்க அமைச்சர் சன்ன ஜயசுமன பாராளுமன்ற உறுப்பினருக்குப் பதிலளித்தார்.
எவ்வாறாயினும், கட்டுப்பாட்டு விலைக்கு அதிகமாக மருந்துகளை விற்பனை செய்தால், அவர்களுக்கு எதிராக தேசிய மருந்துகள் ஒழுங்குமுறை ஆணையம் சட்ட நடவடிக்கை எடுப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
தனியார் துறையினூடாக பொதுமக்களுக்கு நிவாரணம் வழங்குவதற்கான நடைமுறைகள் அரசாங்கத்திற்கு இல்லை எனவும், எனினும் அனைத்து அரச நிறுவனங்களினூடாகவும் இலவச சிகிச்சைகளை வழங்குவதற்கான நடைமுறைகள் நடைமுறையில் உள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.