தமிழ், சிங்கள புது வருடத்துக்கு முன்னர் எரிபொருள், சமையல் எரிவாயு, மின்சாரத் துண்டிப்பு பிரச்சினைகளை தீர்ப்பதற்காக ஜனாதிபதி, பிரதமர் மற்றும் நிதி அமைச்சரின் தலைமையில் பாராளுமன்ற பிரதிநிதிகள் 52 பேர் கொண்ட குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளதாக விவசாய அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே தெரிவித்தார்.
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சித் தலைமையகத்தில் நடைபெற்ற ஊடக சந்திப்பின் போதே அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார்.
தமிழ், சிங்கள புது வருடத்துக்கு முன்னர் எரிபொருள் கியூ, எரிவாயு கியூ மற்றும் மின்சாரத் துண்டிப்பை நிறுத்துவதற்காக ஜனாதிபதி கோட்டாபய
ராஜபக்சவினால் விசேட திட்டமொன்று செயல்படுத்தப்பட்டுள்ளது.
ஜனாதிபதி, பிரதமர் மற்றும் நிதி அமைச்சரின் தலைமையில் அமைச்சரவை அமைச்சர்கள், இராஜாங்க அமைச்சர்கள் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்களென இக்குழுவுக்கு 52 பேரின் பெயர்கள் குறிப்பிடப்பட்டுள்ளன.
நாடு முழுவதுமுள்ள அனைத்து பிரதேசங்களையும் இணைத்ததாக இந்தக் குழு பெயரிடப்பட்டுள்ளது. அனைத்து எரிவாயு மற்றும் எரிபொருள் இருப்பு தொடர்பாக ஆய்வு நடத்தி மக்களுக்கு போதுமானளவு பெற்றுக் கொடுக்கவும் மின் துண்டிப்பு தொடர்பாக ஆய்வு நடத்தி அது தொடர்பாக தீர்வைப் பெற்றுக் கொடுக்கவும் இதன் மூலம் நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.
எரிபொருள் மற்றும் எரிவாயு பெற்றுக் கொடுப்பதிலுள்ள சிக்கலான நிலை மற்றும் பல்வேறு மாபியாக்களை நீக்கி மாவட்ட மட்டத்தில் மக்களுக்கு தேவையான எரிபொருள் மற்றும் எரிவாயுவை பெற்றுக்கொடுக்க நடவடிக்கை எடுக்கப்படுவதன் மூலம் எதிர்வரும் தமிழ், சிங்கள புது வருடத்துக்கு முன்னர் எரிவாயு மற்றும் எண்ணெய்க்கான வரிசையை முடிவுக்குக் கொண்டு வந்து மக்களுக்கு நிம்மதியை ஏற்படுத்துவதற்கான நடவடிக்கைகளை எடுக்கவுள்ளதாகவும் அமைச்சர் இங்கு தெரிவித்தார்.
அங்கு தொடர்ந்து கருத்து தெரிவித்த அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே,
நாம் புது வருடத்துக்கு முன்னர் எரிபொருள் பிரச்சினையை தீர்ப்போம். நுகர்வோர் இன்று, தேவைக்கு அதிகமாக கொள்வனவு செய்வது பிரச்சினைக்கு காரணமாக உள்ளது. தற்போது எரிபொருள் தட்டுப்பாடானது வியாபாரமாக மாறி உள்ளது.
எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்குச் சென்றால் 3,500 ரூபாவுக்கு கேன்களில் எரிபொருளை வாங்கிச் சென்று 5,000 ரூபாவுக்கு விற்று விடுகின்றனர். முன்னர் நாள் ஒன்றுக்கு ஐயாயிரம் மெற்றிக் தொன் விற்பனை செய்யப்பட்டது. ஆனால் இன்று நாளொன்றுக்கு 7,000 மெற்றிக் தொன்னிலிருந்து 8,000 மெற்றிக் தொன் வரை விற்பனையாகிறது.
இதுவே எரிபொருளுக்கான தட்டுப்பாட்டுக்கு காரணம்.
தற்போது எரிபொருளுக்கான வரிசை குறைந்துள்ளது. எதிர்காலத்தில் அது மேலும் குறைய வாய்ப்புள்ளது. எரிவாயு கியூ, பெற்றோல் கியூ, மின்சாரத் துண்டிப்பு மற்றும் பொருட்களின் விலை அதிகரிப்பு தொடர்பாக மக்கள் அதிக கவனம் செலுத்தி வருகின்றனர்.
இம்மாத இறுதிக்குள் எரிவாயு பிரச்சினையை முற்றாக தீர்க்க நடவடிக்கை எடுக்கப்படும்.
ஒரு எரிவாயு கப்பலால் 5,000 மில்லியன் ரூபா நட்டம் ஏற்படுகின்றது.ஆனால் அந்த நட்டத்தை கருதாது மக்களுக்கு தேவையான எரிபொருளை பெற்றுக்கொடுக்க நடவடிக்கை எடுத்துள்ளோம்.