அரசாங்கத்தால் நாட்டை நிர்வகித்து மக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வை வழங்க முடியாவிட்டால் நாட்டை ஆளக்கூடிய தரப்பினரிடம் ஒப்படைப்பது சிறந்ததாகுமென ஐக்கிய தேசிய கட்சியின் இரத்தினபுரி மாவட்ட அமைப்பாளர் எஸ்.ஆனந்தகுமார் தெரிவித்துள்ளார்.
வரலாறு காணாத வகையில் இலங்கையின் பொருளாதாம் கடும் வீழ்ச்சியை சந்தித்துள்ளது. அமெரிக்க டொலருக்கு நிகராக ரூபாயின் பெறுமதி கடுமையான சரிவை சந்தித்து வருவதால் நாட்டில் அத்தியாவசிய பொருட்களுக்கான விலைகளும் கட்டுப்பாடின்றி அதிகரிக்கப்பட்டு வருகிறது.
பெற்றோல் டீசல் விலை முதல் இந்த பொருளின் விலையையும் அரசாங்கத்தால் கட்டுப்படுத்த முடியவில்லை. அரசாங்கத்தின் தவறான பொருளாதார கொள்கைகள் குறித்து ஐதேக ஆரம்பம் முதலே சுட்டிக்காட்டி வந்ததுடன் அதற்கான தீர்வுகளையும் வலியுறுத்தியது. ஆனால் அரசாங்கம் எதனையும் கண்டுகொள்ளாது தான்தோன்றி தனமான தீர்மானங்களையே எடுத்து செயல்படுத்தி வந்தது.
முதல்கோணல் முற்றும் கோணல் என்பர். அதுதான் இந்த அரசாங்கத்தின் கதையும். அரசாங்கம் அமையப்பெற்றதும் வரி கொள்கை தொடர்பில் எடுக்கப்பட்ட முதல் தீர்மானமே தவறாகிவிட்டது. இதனால் அரச வருமானம் பாரியளவு குறைவடைந்து. அந்த சபை மக்கள்மீது சுமத்தப்பட்டது.
இயற்கை உரக்கொள்கை இறக்குமதி தொடர்பிலான கட்டுப்பாடுகள் காரணமாக மேலும் சுமைகள் அதிகரித்தன. கட்டம் கட்டமாக செய்யவேண்டிய சேதன பசளை பயன்பாட்டை எடுத்த எடுப்பில் அரசாங்கம் அமுல் படுத்தியதால் உற்பத்திகள் குறைந்து நாட்டில் உணவு பர்ராக்குறை ஏற்பட்டுள்ளது.
அதேபோன்று சமநிலையற்ற வெளிவிவகார கொள்கையால் நாட்டைநோக்கி முதலீடுகள் வரவில்லை. இதனால் அந்நிய வருவாய் குறைவடைந்து டொலரின் கையிருப்பு குறைந்தது. வரலாற்றில் இத்தகைய மோசமானதொரு டொலர் கையிருப்பை எந்தவொரு அரசாங்கமும் கொண்டிருந்திருக்கவில்லை. நாட்டில் இன்று ஏற்பட்டுள்ள அனைத்து நெருக்கடிகளுக்கும் டொலர் கையிருப்பில் இன்மையே காரணமாகும். ஆனால் கொரோனாவையும் கடந்த அரசாங்கத்தையும் கூறி கூறி அரசாங்கம் நழுவுகிறது.
இந்த அரசாங்கத்தின் போலி தேசிய பற்றை அவர்களுக்கு வாக்களித்த பெரும்பான்மை மக்களே உணர்ந்துவிட்டனர். அரசாங்கம் வீட்டுக்கு செல்லும் நேரம் வந்துவிட்டது. நாட்டை ஆளக்கூடாய சரியான தலைவர் ரணில் என்பதை மக்கள் உணர்ந்துள்ளனர். அதனால்தான் பிரதமர் பதவியை பெற்றுக்கொள்ளுமாறும் தேசிய அரசை அமைப்போம் என்றும் தொடர்ச்சியான அழைப்புகள் அவருக்கு ஆளும் தரப்பாலே விடுக்கப்படுகிறது.
நாட்டு மக்களின் விருப்பத்தின்பால் நாட்டை மீண்டும் கட்டியெழுப்ப ஐதேக தயாராக உள்ளது என்றும் எஸ்.ஆனந்தகுமார் தெரிவித்துள்ளார்.