தமிழ் இனத்தின் விடுதலைக்காக அறவழியில் போராடிய தந்தை செல்வாவின் 123 ஆவது ஜனன தினம் இன்றாகும்.
ஈழத் தமிழர்களுக்காக மட்டுமல்ல மலையகத் தமிழர்களுக்காகவும் ஒட்டுமொத்தமாக தமிழ்பேசும் மக்களுக்காகவும் இறுதிமூச்சு இறுக்கும்வரை குரல் கொடுத்த இவர் அக்காலகட்டத்தில் மீட்பராகவே பார்க்கப்பட்டார்.
தந்தை செல்வாவின் வாழ்க்கை குறிப்பு…….
✍️பிறப்பு – 1898 மார்ச் 31. (மலேசியா)
✍️தாய் – அன்னம்மா கணபதிப்பிள்ளை.
✍️தந்தை – சாமுவேல் ஜேம்ஸ் வேலுப்பிள்ளை.
✍️இரு தம்பிமார். ஒரு தங்கை.
✍️ 4 வயதில் மலேசியாவிலிருந்து யாழ்ப்பாணம் வந்தார்.
கல்வி……
✍️ ஆரம்பக்கல்வி – அமெரிக்க மிஷன் பாடசாலை, தெல்லிப்பழை.
✍️உயர்கல்வி – சென். தோமஸ் கல்லூரி, கொழும்பு,
✍️1917 இல் ஆசிரியராக பணியை ஆரம்பித்தார்.அதன்பின்னர் விஞ்ஞானப் பட்டதாரிக்குரிய பரீட்சையிலும் சித்தியடைந்தார்.
✍️ஆசிரியராக இருந்தபோதே சட்டக்கல்லூரிக்கும்சென்று பரீட்சையில் சித்தியடைந்து 26 வயதில்சட்டத்தரணியானார்.(1924)
அரசியல்……..
✍️அமரர். ஜி.ஜி. பொன்னம்பலம் தலைமையில் 1944 ஆகஸ்ட் 29 ஆம் திகதி அகில இலங்கை தமிழ்க் காங்கிரஸ் உதயமானது. அதன் ஊடாகவே தந்தை செல்வா செயற்பாட்டு அரசியல் பயணத்தை ஆரம்பித்தார்.
✍️1947 இல் இலங்கையில் நடைபெற்ற முதலாவது பொதுத்தேர்தலில் தமிழ்க் காங்கிரஸ் சார்பில் காங்கேசன்துறை தொகுதியில் போட்டியிட்ட தந்தை செல்வா வெற்றிபெற்றார்.அத்தேர்தலில் காங்கிரஸ் 7 ஆசனங்களைக் கைப்பற்றியது.
✍️1948 ஆம் ஆண்டில் குடியுரிமை சட்டத்தின் ஊடாக மலையகத் தமிழர்களின் பிரஜாவுரிமை பறிக்கப்பட்டது.( அப்போது மலையக தமிழர்களின் சார்பில் எழுவர் பாராளுமன்றத்தில் அங்கம் வகித்தனர்.
டி.எஸ். சேனாநாயக்க தலைமையிலான ஐக்கிய தேசியக்கட்சியின் இந்த துரோக- அடாவடிச் செயலுக்கு அரசின் பங்காளிக்கட்சியாக இருந்த தமிழ் காங்கிரசும் துணைநின்றது.
எனினும் தந்தை செல்வா இதனை கடுமையாக எதிர்த்தார் – வன்மையாக கண்டித்தார் – மலையகத் தமிழர்களுக்காக துணிகரமாக குரல் கொடுத்தார்.இறுதியில் தமிழ் காங்கிரசுடன் ஏற்பட்ட முரண்பாடு காரணமாக அரசாங்கத்திலிருந்தும் வெளியேறினார். தந்தை செல்வாவுக்கு ஆதரவாக மேலும் சிலர் அவர் பின்னால் அணி திரண்டனர்.
சமஷ்டிக்கட்சி உதயம்…..
✍️1949 டிசம்பர் 18 ஆம் திகதி தந்தை செல்வா தலைமையில் ‘சமஷ்டி கட்சி’ உதயமானது.காலப்போக்கில் இலங்கை தமிழ் அரசுக் கட்சியாக பெயர் மாற்றம் பெற்றது. தற்போது அதன் தலைவராக மாவை சேனாதிராஜா செயற்பட்டுவருகிறார்.
✍️1952 நடைபெற்ற பொதுத் தேர்தலில் போட்டியிட்ட தந்தை செல்வா வெற்றிபெறமுடியவில்லை. 11 ஆயிரத்து 571வாக்குகளை மட்டுமே பெற்றிருந்தார். எனினும், 1956 இல் அவர் மக்களின் அமோக ஆதரவுடன் பாராளுமன்றத்துக்கு தெரிவானார்.
✍️எஸ்.டபிள்யூ.ஆ.டி. பண்டாரநாயக்க தலைமையிலான சுதந்திரக்கட்சியின் சிங்கள மொழி திணிப்புக்கு எதிராக அறவழியில் தந்தை செல்வா போராடினார். மலையக அரசியல் பிரதிநிதிகளும் ஆதரவு தெரிவித்தன.
✍️தமிழ்க் கட்சிகளின் ஐக்கியத்தை உணர்ந்து 1972 இல் தமிழர் ஐக்கிய விடுதலைக் கூட்டணி உருவாக்கப்பட்டது. தமிழரசுக்கட்சி, தமிழ்க் காங்கிரஸ், இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ் ஆகியன இக்கூட்டணியில் அங்கம் வகித்தன.
தந்தை செல்வா, ஜி.ஜி. பொன்னம்பலம், சௌமியமூர்த்தி தொண்டமான் ஆகியோர் கூட்டணியின் இணைத்தலைவர்களாக செயற்பட்டனர்.
✍️தமிழர் ஐக்கிய விடுதலைக் கூட்டணியின் முதலாவது மாநாடு 1976 மே மாதம் 14 ஆம் திகதி யாழ்ப்பாணம் வட்டுக்கோட்டையில் நடைபெற்றது.
✍️இம்மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட பிரகடனமே வட்டுக்கோட்டை தீர்மானம் என அழைக்கப்படுகின்றது.
✍️இலங்கைத் தீவின் வடக்கு, கிழக்கு மாகாணங்களை உள்ளடக்கிய பாரம்பரிய, சுதந்திரம் மற்றும் இறையாண்மை கொண்ட தமிழர் தாயகம் வேண்டும் என இந்தத் தீர்மானத்தில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
வட்டுக்கோட்டை பிரகடனத்தில் முஸ்லிம் மக்களும் சுயாட்சி உரிமையுடன் வாழ முடியும் என்ற விடயம் உள்ளடக்கப்பட்டிருந்தது.
✍️இம்மாநாடு நடைபெறும்போது தொண்டமான் இந்தியா சென்றிருந்தார் என்றும், நாடு திரும்பிய பின்னர், நிறைவேற்றப்பட்ட தீர்மானத்துடன் தனக்கு தொடர்பில்லை என அறிக்கை விட்டார் எனவும் கூறப்படுகின்றது.
✍️1976 ஏப்ரல் 26 இல் தந்தை செல்வா காலமானார்.
✍️1977 ஜீலை 21 இல் நடைபெற்ற பொதுத்தேர்தலில் போட்டியிட்ட தமிழர் ஐக்கிய விடுதலைக் கூட்டணி 18 ஆசனங்களைக் கைப்பற்றியது. பாராளுமன்றத்தில் பிரதான எதிர்க்கட்சி என்ற அந்தஸ்த்தையும் பெற்றது.
ஆர்.சனத்