” நாடாளுமன்றத்தில் சாதாரண பெரும்பான்மையை நிரூபிக்கும் கட்சியிடம் ஆட்சியைக் கையளிக்க தயார் என ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ச அறிவித்தார்.” – என்று ஆளுங்கட்சி நாடாளுமன்ற உறுப்பினரும், முன்னாள் அமைச்சருமான பிரசன்ன ரணதுங்க தெரிவித்தார்.
ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ச தலைமையிலான அரசின் அமைச்சர்கள் நேற்று முன்தினம் கூண்டோடு இராஜினாமா செய்தனர். இந்நிலையில் அத்தியாவசியமென கருதப்படும் நான்கு விடயதானங்களுக்கு நேற்று அமைச்சர்கள் நியமிக்கப்பட்டனர்.
அதன்பின்னர் ஆளுங்கட்சியின் விசேட கூட்டமொன்று நடைபெற்றது. ஜனாதிபதி தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் சுமார் 138 நாடாளுமன்ற உறுப்பினர்கள் பங்கேற்றிருந்தனர்.
சந்திப்பின் பின்னர் ஊடகங்களிடம் கருத்து வெளியிட்ட பிரசன்ன ரணதுங்க,
” நாடாளுமன்றத்தில் 113 ஆசனங்கள் என்ற சாதாரண பெரும்பான்மை நிரூபிக்கும் கட்சியிடம் ஆட்சியை ஒப்படைக்க தயார் என ஜனாதிபதி குறிப்பிட்டார். அத்துடன், சகல அரசியல் கட்சிகளுக்கும் அவர் அழைப்பு விடுத்துள்ளார். எதிரணிகளின் பிரதிபதிக்காக காத்திருக்கின்றோம்.” – என்றார்.