நாட்டில் தற்போது தோற்றம் பெற்றுள்ள பிரச்சினைகளுக்கு இவ்வார காலத்திற்குள் அரசாங்கம் தீர்வு பெற்றுக்கொடுக்கும் என தெரிவித்த முன்னாள் காணி விவகாரத்துறை அமைச்சர் எஸ்.எம்.சந்திரசேன, போராட்டங்களால் அரசாங்கத்தை ஒருபோதும் வீழ்த்த முடியாது. அரசியல்வாதிகளின் தவறான வழிநடத்தல்களினால் போராட்டம் தீவிரமடைகிறது எனவும் தெரிவித்தார்.
அனுராதபுரம் பகுதியில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துரைக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்ட அவர் மேலும் தெரிவிக்கையில்,
பொருளாதார ரீதியில் நாட்டு மக்கள் பல சிக்கல்களை எதிர்க்கொண்டுள்ளார்கள் என்பதை அரசாங்கம் ஒருபோதும் மறுக்கவில்லை.
எரிபொருள்,எரிவாயு மற்றும் மின்சாரம் ஆகிய சேவைத்துறையில் ஏற்பட்டுள்ள சிக்கல் நிலைமைக்கு தீர்வு காணுமாறு உரிய தரப்பினருக்கு ஜனாதிபதி ஆலோசனை வழங்கியுள்ளதுடன்,அவை தற்போது செயற்படுத்தப்பட்டுள்ளன.
நாட்டு மக்களுக்கு நிவாரணம் வழங்கவும் விசேட அவதானம் செலுத்தப்பட்டுள்ளது.இவ்வாறான நிலையில் ஒரு தரப்பினர் நாட்டு மக்களை வீதியிலிறக்கி அரசாங்கத்திற்கு எதிரான போராட்டங்களை திட்டமிட்டு முன்னெடுத்து வருகிறார்கள்.
போராட்டங்களினால் அரசாங்கத்தை ஒருபோதும் வீழ்த்த முடியாது.
சமூக கட்டமைப்பில் தோற்றம் பெற்றுள்ள பிரச்சினைகளுக்கு இவ்வார காலத்திற்குள் தீர்வு காண அரசாங்கம் உரிய நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளது.சேதன பசளை கொள்கை திட்டத்தை விரைவாக மாற்றியமைக்குமாறு ஜனாதிபதியிடம் வலியுறுத்தியுள்ளோம்.” – என்றும் அவர் கூறினார்.