இலங்கையில் கடும் பொருளாதார நெருக்கடிகளுக்கு மத்தியில் அரசியல் நெருக்கடியும் தலைதூக்கியுள்ளது. எனவே, அரசியல் நெருக்கடிக்கு தீர்வு காணாவிட்டால், பொருளாதார நெருக்கடி மேலும் உக்கிரமடையும் அபாயம் உள்ளது.
தொங்கு நாடாளுமன்றம் உருவாகியுள்ள நிலையில், அரசியல் நெருக்கடியை தீர்க்க பல தரப்பினரும் யோசனைகளை முன்வைத்துவருகின்றனர். தற்போதைய நிலைமை தொடர்பில் இன்றும் (06), நாளையும் (07) நாடாளுமன்றத்தில் விவாதம் இடம்பெறவுள்ளது.
✍️2020 ஆகஸ்ட் 05 இல் நாடாளுமன்றத் தேர்தல் நடைபெற்றது. இதன்படி 9 ஆவது நாடாளுமன்றத்துக்கு 2025 வரை பதவி காலம் உள்ளது.
✍️இந்த காலப்பகுதிக்கு முன்னர் – நாடாளுமன்றத்தை கலைக்க வேண்டுமானால்,
✍️அரசமைப்பின் பிரகாரம், முதலாவது நாடாளுமன்ற கூட்டத்தொடர் நடைபெற்ற நாளில் இருந்து இரண்டரை வருடங்களுக்கு பிறகே ஜனாதிபதியால் நாடாளுமன்றத்தை கலைக்க முடியும். இதற்காக 2023 பெப்ரவரிவரை காத்திருக்க வேண்டிவரும்.
✍️ அதேபோல விரைவில் நாடாளுமன்றம் கலைக்கப்பட வேண்டுமெனில், அதற்கான யோசனையொன்று நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட வேண்டும். இதற்கு மூன்றிலிரண்டு பெரும்பான்மை அவசியமில்லை.
அரசமைப்பில் இந்த இரு ஏற்பாடுகள் மட்டுமே உள்ளன.
✍️ அதேவேளை, சபாநாயகர் மஹந்த யாப்பா அபேவர்தன தலைமையில் நாடாளுமன்றத்தில் நேற்று (05) நடைபெற்ற கட்சி தலைவர்கள் கூட்டத்திலும் அரசியல் நெருக்கடியை தீர்ப்பது தொடர்பில் விரிவாக ஆராயப்பட்டுள்ளது. 3 வழிமுறைகள் குறித்து ஆராயப்பட்டுள்ளது.
1. ஜனாதிபதி பதவி விலகல்.
2. நாடு சாதாரண நிலைக்குவரும்வரை இடைக்கால அரசொனறை அமைத்தல்.
3.நாடாளுமன்றத்தை கலைத்தல்.
இதன்போது ஜனாதிபதியை பதவி விலகுமாறு தன்னால் கோரமுடியாதென சபாநாயகர் தெரிவித்துள்ளார். இதனால் இணக்கப்பாடு எட்டப்படாமலேயே கட்சி தலைவர்கள் கூட்டம் முடிவடைந்துள்ளது.
✍️ அரசின் பெரும்பான்மையை பரிசோதிப்பதற்கும், நாடாளுமன்ற உறுப்பினர்களின் மன நிலைமைய அறிவதற்கும் அரசுக்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணையொன்றை முன்வைக்குமாறு சட்டத்தரணி மைத்திரி குணவர்தன கருத்து வெளியிட்டுள்ளார்.
✍️ அத்துடன், தேசிய பட்டியல் ஊடாக 25 நிபுணர்களை நாடாளுமன்றத்துக்கு அனுப்பி, நெருக்கடி நிலை தீரும்வரை, அவர்களின் வழிகாட்டலுடன் ஆட்சியை முன்னெடுக்கலாம் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். இதற்காக தற்போதைய நாடாளுமன்றில் உள்ள 25 பேர் பதவி துறக்க வேண்டும்.
ஆர்.சனத்