நாடாளுமன்றத்தை எதிர்வரும் ஏப்ரல் 19ஆம் திகதி முதல் 22ஆம் திகதி வரை கூட்டுவதற்கு பாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தலைமையில் இன்று (08) பிற்பகல் நடைபெற்ற நாடாளுமன்ற அலுவல்கள் பற்றிய குழுக் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டதாக நாடாளுமன்ற செயலாளர் நாயகம் தம்மிக தசநாயக தெரிவித்தார்.
நாடாளுமன்றம் கூடும் அனைத்துத் தினங்களிலும் மு.ப 10.00 மணி முதல் 11.00 மணிவரை நாடாளுமன்ற உறுப்பினர்களின் வாய்மூல விடைக்கான கேள்விகளுக்காக ஒதுக்கப்பட்டுள்ளது.
அத்துடன், இந்த அனைத்துத் தினங்களிலும் பிற்பகல் 4.30 மணி முதல் 4.50 மணிவரை சபை ஒத்திவைப்பு நேரத்தின் போதான கேள்விகளுக்காக நேரம் ஒதுக்கப்பட்டிருப்பதுடன், பி.ப 4.50 மணி முதல் பி.ப 5.30 மணிவரையான காலப் பகுதியில் முறையே ஆளும் கட்சி, எதிர்க்கட்சியினால் கொண்டுவரப்படும் சபை ஒத்திவைப்பு நேரத்தின் போதான பிரேரணை மீதான விவாதத்தையும் நடத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.