” ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ச பதவி விலக வேண்டும் என்பதே போராட்டக்களத்தில் உள்ள மக்களின் ஏகோபித்த கோரிக்கையாக உள்ளது. இந்நிலையில் போராட்டத்தின் நோக்கத்தை திசை திருப்பவும், போராட்டக்காரர்கள் மத்தியில் பிளவை ஏற்படுத்துவதற்காகவுமே பிரதமர் மஹிந்த ராஜபக்ச பேச்சுக்கு அழைத்துள்ளார்.”
இவ்வாறு ஜே.வி.பியின் செயலாளர் நாயகம் ரில்வின் சில்வா தெரிவித்தார். இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,
” ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ச பதவி விலக வேண்டும், இந்த அரசு வீடு செல்ல வேண்டும் என வலியுறுத்தியே நாட்டு மக்கள் தன்னெழுச்சியாக போராடிவருகின்றனர். ஆனாலும் மக்களின் கோரிக்கையை ஏற்று ஆட்சியை விட்டு செல்ல ஆட்சியாளர்கள் தயார் இல்லை. அதிகாரத்தை தக்கவைத்துக்கொள்ளவே பாடுபடுகின்றனர்.
காலி முகத்திடலில் போராடும் இளைஞர்களின் போராட்டத்தையும், மக்களின் எழுச்சியையும் ஒடுக்குவதற்கு இந்த அரசு குறுக்கு வழி நடவடிக்கைகளை கையில் எடுத்துள்ளது. ஆட்களை கூலிக்கு வாங்கி இனவாதம் பரப்பட்டது. அது கைகூடவில்லை. பிரதமர் நாட்டு மக்களுக்கு உரையாற்றி, பிள்ளைகளை பாதுகாக்குமாறு பெற்றோருக்கு எச்சரிக்கை விடுத்தார். அதுவும் எடுபடவில்லை.
அதனால்தான் தற்போது பேச்சுக்கு அழைத்துள்ளார். இந்த அழைப்பின் பின்னாலும் உள்நோக்கம் உள்ளது. போராட்டத்தை திசை திருப்ப வேண்டும், போராட்டக்காரர்களை பிளவுபடுத்த வேண்டும் என்பதே அதன் நோக்கம். ‘கோத்தா வீடு செல்ல வேண்டும்’ என்பதே பிரதான கோரிக்கை இதனை எழுதியும் வைத்துள்ளனர். அந்த கோஷம்தான் ஒலிக்கின்றது. அதனை ஏற்க வேண்டும். அதைவிடுத்து பேச்சு நடத்தி பயன் இல்லை.
மக்கள் எழுச்சியை சாதாரணமாகக் கருதக்கூடாது. மக்கள் போராட்டம் வெற்றியளிக்க தேசிய மக்கள் சக்தி முழு ஆதரவையும் வழங்கும்.” – என்றார்.