நாடாளுமன்றத்தை கலைக்கும் யோசனையை நிறைவேற்றி, பொதுத்தேர்தலுக்கு செல்லாம் என ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்சவால் முன்வைக்கப்பட்ட யோசனையை ஆளுங்கட்சி பிரமுகர்கள் நிராகரித்துள்ளனர் என தெரியவருகின்றது.
அரசு வசம் சாதாரண பெரும்பான்மை (113) இருப்பதாலும், தற்போதைய சூழ்நிலையில் தேர்தலுக்கு சென்றால் அது ஆளுந்தரப்புக்கு வரலாறுகாணாத பின்னடைவை ஏற்படுத்தும் என்பதாலுமே ‘தேர்தலுக்கு செல்லும்’ யோசனை நிராகரிக்கப்பட்டுள்ளது.
ஜனாதிபதிக்கும், பதவி துறந்த அமைச்சர்களுக்கும் இடையிலான விசேட சந்திப்பொனறு நேற்று முன்தினம் இரவு நடைபெற்றது.
இதன்போது சமகால அரசியல் நிலைவரம் பற்றியும், அரசியல் நெருக்கடிக்கான தீர்வுகள் பற்றியும் ஆராயப்பட்டுள்ளன. இதன்போது ஜனாதிபதியால் மூன்று யோசனைகள் முன்மொழியப்பட்டுள்ளன.
அரசமைப்பின் பிரகாரம் தனக்கு இரண்டரை வருடம் செல்லும்வரை நாடாளுமன்றத்தை கலைக்க முடியாதென்பதால், ஆளுங்கட்சி உறுப்பினர் ஒருவர் ஊடாக யோசனையொன்றை முன்வைத்து நாடாளுமன்றத்தைக் கலைத்து, தேர்தலுக்கு செல்லாம் என ஜனாதிபதியால் முன்வைக்கப்பட்ட முதல் யோசனையை அவர்கள் ஏற்க மறுத்துள்ளனர்.
அதேபோல பிரதமர் பதவி விலகி, ஆட்சியை முன்னெடுக்க எதிரணிக்கு வாய்ப்பை வழங்கலாம் என முன்வைக்கப்பட்ட யோசனைக்கும் முன்னாள் அமைச்சர்கள் எதிர்ப்பை வெளியிட்டுள்ளனர். அரசு வசம் சாதாரண பெரும்பான்மை இருப்பதால் அதற்கான தேவைப்பாடு எழவில்லை, நம்பிக்கையில்லாப் பிரேரைண வந்தால்கூட அதனை தோற்கடிக்கலாம் என ஜனாதிபதியிடம் சுட்டிக்காட்டியுள்ளனர்.
இறுதியாக , 15 பேருடன் அமைச்சரவையை அமைக்கலாம், சிரேஷ்ட உறுப்பினர்கள் விட்டுக்கொடுப்புகளை செய்ய வேண்டும் என்ற யோசனையை ஜனாதிபதி முன்வைத்துள்ளார். அதற்கு சரத் வீரசேகரவைதவிர ஏனையோர் ஆதரவை தெரிவித்துள்ளனர்.
அந்தவகையிலேயே புதிய அமைச்சரவையை நியமிக்க திட்டமிடப்பட்டுள்ளது என தெரியவருகின்றது.