’20’ ஐ ஆதரித்த அரவிந்தகுமாருக்கு இராஜாங்க அமைச்சு – சுரேன் ராகவனும் ‘பல்டி’

சுயாதீனமாக செயற்படபோவதாக அறிவிப்பு விடுத்த ஶ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் மற்றுமொரு நாடாளுமன்ற உறுப்பினரும், அரசுக்கு நேசக்கரம்நீட்டி இராஜாங்க அமைச்சு பதவியை பெற்றுக்கொண்டுள்ளார்.

ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசியப்பட்டியல் ஊவாக ‘அதிஉயர்’ சபைக்கு தெரிவான – சுதந்திரக்கட்சி உறுப்பினரான கலாநிதி சுரேன் ராகவனே, இவ்வாறு கல்வி சேவை மற்றும் மறுசீரமைப்பு இராஜாங்க அமைச்சை இன்று (18) ஜனாதிபதி முன்னிலையில் பெற்றுக்கொண்டுள்ளார்.

ஶ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் பிரச்சார செயலாளராக செயற்பட்ட சாந்த பண்டாரவும், அரசுக்கு ஆதரவு வழங்கி விவசாயத்துறை இராஜாங்க அமைச்சு பதவியை பெற்றுக்கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
அந்தவகையில் நாடாளுமன்றத்தில் தற்போது சுதந்திரக்கட்சி பக்கம் 12 எம்.பிக்களே உள்ளனர்.

அத்துடன், அரசமைப்பின் 20ஆவது திருத்தச்சட்டத்துக்கு ஆதரவு வழங்கிய பதுளை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் அ. அரவிந்தகுமாருக்கும் இராஜாங்க அமைச்சு பதவி வழங்கப்பட்டுள்ளது.

ஜீவன் தொண்டமான் வகித்த தோட்ட வீடமைப்பு மற்றும் சமூக உட்கட்டமைப்பு வசதிகள் இராஜாங்க அமைச்சே அரவிந்தகுமாரிடம் கையளிக்கப்பட்டுள்ளது.
வாசுதேவ நாணயக்கார தலைமையிலான ஜனநாயக இடதுசாரி முன்னணியின் உறுப்பினரும், மொட்டு கட்சியின் மொனறாகலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான கயாஸான் நவனந்த, சுகாதார இராஜாங்க அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளார்.

11 கட்சிகளின் சுயாதீன பட்டியலில் இவரின் பெயர் ஆரம்பத்தில் இருந்தாலும், பின்னர் தனது முடிவை மாற்றிக்கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
ஜனாதிபதி முன்னிலையில் இராஜாங்க அமைச்சர்களாக பதவியேற்றம் செய்துகொண்ட உறுப்பினர்கள் விபரம் வருமாறு,

✍️ பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ் – பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர். ( இவர் வெளிவிவகார அமைச்சராகவும் செயற்படுவார்.)

✍️ ரோஹண திசாநாயக்க – உள்ளூராட்சி சபைகள் மற்றும் மாகாண சபைகள் இராஜாங்க அமைச்சர்.

✍️ அருந்திக்க பெர்னாண்டோ – பெருந்தோட்டக் கைத்தொழில் இராஜாங்க அமைச்சர்.

✍️ லொஹான் ரத்வத்த – நகர அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர்.

✍️ தாரக்க பாலசூரிய – வௌிவிவகார இராஜாங்க அமைச்சர்.

✍️ இந்திக்க அனுருத்த – வீடமைப்பு இராஜாங்க அமைச்சர்.

✍️ சனத் நிஷாந்த – நீர் வழங்கல் இராஜாங்க அமைச்சர்.

✍️ சிறிபால கம்லத் – மகாவலி இராஜாங்க அமைச்சர்.

✍️ அனுராத ஜயரத்ன – நீர்ப்பாசன இராஜாங்க அமைச்சர். ( முன்னாள் பிரதமர் திமு ஜயரத்னவின் மகன்)

✍️ சிசிர ஜயகொடி- சுதேச மருத்துவ இராஜாங்க அமைச்சர்.

✍️ பிரசன்ன ரணவீர – கைத்தொழில் இராஜாங்க அமைச்சர்.

✍️ டீ. வீ. சானக்க -சுற்றுலாத்துறை மற்றும் கடற்றொழில் இராஜாங்க அமைச்சர்.

✍️ டி. பீ. ஹேரத் – கால்நடை வளங்கள் இராஜாங்க அமைச்சர்.

✍️ காதர் மஸ்தான் – கிராமிய பொருளாதார, பயிர்ச்செய்கை அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர்.

✍️ அசோக்க பிரியந்த – வர்த்தக இராஜாங்க அமைச்சர்.

✍️ ஏ.அரவிந்த் குமார் – தோட்ட வீடமைப்பு மற்றும் உட்கட்டமைப்பு வசதிகள் இராஜாங்க அமைச்சர்.

✍️ கீதா குமாரசிங்க – கலை இராஜாங்க அமைச்சர்.

✍️ குணபால ரத்னசேகர -கூட்டுறவு சேவை, விற்பனை அபிவிருத்தி மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர்.

✍️ கபில நுவன் அத்துகோரள – சிறு ஏற்றுமதி இராஜாங்க அமைச்சர்.

✍️ கயாஷான் நவனந்த – சுகாதார இராஜாங்க அமைச்சர்.

✍️ சுரேன் ராகவன் – கல்விச் சேவை மற்றும் கல்வி மறுசீரமைப்பு இராஜாங்க அமைச்சர்.

✍️ சுயாதீனமாக செயற்படுவதாக ஆரம்பத்தில் அறிவித்த பிரியங்கரவும் பின்னர் இராஜாங்க அமைச்சு பதவியில் நீடிக்க தீர்மானித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

✍️ இராஜாங்க அமைச்சராக செயற்பட்ட வியத்மக உறுப்பினரான சீதா அரம்பேபொலவுக்கு எவ்வித பதவியும் வழங்கப்படவில்லை. கஞ்சா பயிரிட அனுமதி வழங்கினால் டொலர் வருமானத்தை பெறலாம் என ஆலோசனை வழங்கிய – 20 அவது திருத்தச்சட்டத்தை ஆதரித்த டயானாவுக்கும் பதவி இல்லை .

ஆர்.சனத்

Related Articles

Latest Articles