ஐக்கிய மக்கள் சக்தியால், அரசாங்கத்துக்கு எதிராக கொண்டுவர இருக்கும் நம்பிக்கையில்லா பிரேரணை மற்றும் ஜனாதிபதிக்கு எதிரான குற்றப்பிரேரணை ஆகியவற்றை நாளை 20ஆம் திகதி சபாநாயகருக்கு கையளிக்க தீர்மானித்திருக்கின்றது.
புத்தாண்டு விடுமுறைக்கு சொந்த இடங்களுக்கு சென்றிருக்கும் அதிகமான பாராளுமன்ற உறுப்பினர்கள் இன்று செவ்வாய்க்கிழமை கொழும்பு திரும்பியதும் அவர்களதுஇணக்கப்பாட்டையும் பெற்றுக்கொண்ட பின்னர் கையளிக்க இருப்பதாக கட்சியின் சிரேஷ்ட உறுப்பினர் ஒருவர் தெரிவித்தார்.
அத்துடன் பிரேரணையை வெற்றிகொள்வதற்கு பாராளுமன்றத்தில் 113 உறுப்பினர்களின் ஆதரவு தேவைப்படுகின்றது.
எதிர்க்கட்சியில் இருக்கும் அரசியல் கட்சிகள் அனைத்தும் பிரேரணைக்கு ஆதரவளிப்பதாக தெரிவித்து கைச்சாத்திட்டுள்ளனர். எனினும் ஐக்கிய தேசிய கட்சி சார்ப்பில் ரணில் விக்ரமசிங்கவிடம் இதுதொடர்பாக பல தடவைகள் கேட்டிருந்தபோதும் இதுவரை எந்த பதிலும் கிடைக்கவில்லை என அவ் உறுப்பினர் தெரிவித்தார்.
அத்துடன் பாராளுமன்றத்தில் சுயாதீனமாக செயற்பட தீர்மானித்திருக்கும் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் நிலைப்பாடு மற்றும் விமல் வீரவன்ச தலைமையிலான தேசிய சுதந்திர முன்னணி தனது நிலைப்பாட்டை இன்னும் அறிவிக்கவில்லை. என்றாலும் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி பிரேரணைக்கு ஆதரவளிக்கும் என்ற நம்பிக்கை எமக்கு இருக்கின்றது. அதேபோன்று அரசாங்கத்தில் இருக்கும் சிலர் பிரேரணைக்கு ஆதரவாக வாக்களிப்பதாக எமக்கு தெரிவித்துள்ளனர். அரசாங்கத்துக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை மற்றும் ஜனாதிபதிக்கு எதிரான குற்றப்பிரேரணை ஆகியவற்றுக்கு பாராளுமன்ற உறுப்பினர்களின் கையொப்பத்தை பெற்றுக்கொண்ட பின்னர், அதனை சபாநாயகருக்கு சமர்ப்பிக்க முன் பிரேரணையில் கைச்சாத்திட்டவர்களின் பெயர் பட்டியலை ஊடகங்களுக்கு வெளியிட தீர்மானித்திருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.