‘மாற்று வழி இல்லை – அவசரமாக தீர்வை தேட வேண்டும்’ – சபையில் ரணில் எச்சரிக்கை

“ நாட்டில் ஏற்பட்டுள்ள நெருக்கடி நிலையை நீடிக்க இடமளிக்ககூடாது. தற்போது மாற்றுவழிகளும் இல்லாமல் போயுள்ளது. இன்னும் ஒரிரு நாட்கள் சென்றால் பிரச்சினை வெடித்துவிடும். எனவே. நாடாளுமன்றம் ஊடாக தீர்வொன்றை எடுத்து அதனை ஜனாதிபதிக்கு தெரியப்படுத்துவோம்.”

இவ்வாறு ஐக்கிய தேசியக்கட்சியின் தலைவரும், முன்னாள் பிரதமருமான ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார்.

ரம்புக்கனை சம்பவம் தொடர்பில் நாடாளுமன்றத்தில் நேற்று கருத்து வெளியிட்ட அவர் மேலும் கூறியவை வருமாறு,

“ ரம்புக்கனை சம்பவத்துக்கு அரசியல் சாயம் பூச வேண்டாம். அது எதிரணிகளால் திட்டமிட்ட அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட சூழ்ச்சி அல்ல. நாட்டில் ஏனைய பகுதிகளிலும் போராட்டங்கள் இடம்பெற்றன. வீதிகள் மறிக்கப்பட்டன. ஆனால் ரம்புக்கனையில் மட்டும் அவசரம் காட்டப்பட்டது ஏன்? மக்கள் இடையூறு விளைவித்திருக்கலாம். ஆனால் பவுசரை எரிக்கும் நிலையில் இருந்திருக்கமாட்டார்கள். சம்பவத்தில் உயிரிழந்த ஐக்கிய தேசியக்கட்சியின் ஆதரவாளர் பவுசரை எரிக்கும் நபரும் அல்லர்.

நாட்டுக்கு தேவையான எரிபொருள் தற்போது கைவசம் இல்லை. சிறிமாவோ பண்டாரநாயக்க, நெருக்கடியான காலகட்டத்தில்கூட எரிபொருள் வழங்கினார். இந்த அரசு அதற்கான நடவடிக்கையை எடுக்கவில்லை.

நாட்டின் தற்போதைய நிலை நீடிக்க இடமளிக்ககூடாது. தீர்வை வழங்கியாக வேண்டும். தீர்வு பொறிமுறை தொடர்பில் நாடாளுமன்றத்தில் கலந்துரையாட வேண்டும். தீர்வை ஜனாதிபதிக்கும், அரசுக்கு தெரியப்படுத்த வேண்டும். ரம்புக்கனை சம்பவம் தொடர்பில் சுயாதீன விசாரணை அவசியம்.” – என்றார்.

Related Articles

Latest Articles