மஹிந்த தலைமையில் வலுவான அரசு – ஆளுங்கட்சி கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றம்!

பிரதமர் மஹிந்த ராஜபக்ச தலைமையில் அரசாங்கத்தை வலுவாக கொண்டுசெல்லும் முன்மொழிவு இன்று (21) ஆளும் கட்சி உறுப்பினர்கள் குழு கூட்டத்தில் ஏகமனதாக நிறைவேற்றப்பட்டது.

நாட்டில் ஏற்பட்டுள்ள நிலைமைக்கு மத்தியில் அரசாங்கம் அதனை வலுவாக எதிர்கொள்ள வேண்டும் எனவும், அதற்கு பிரதமர் மஹிந்த ராஜபக்ச தலைமையில் அரசாங்கத்தை தொடர்ந்து முன்னெடுத்து செல்ல வேண்டும் என்றும் பாராளுமன்ற உறுப்பினர் சஹன் பிரதீப் முன்மொழிந்தார்.

அந்த முன்மொழிவிற்கு அனைத்து உறுப்பினர்களும் கைகளை உயர்த்தி ஏகமனதாக ஆதரவளித்ததுடன், பாராளுமன்ற உறுப்பினர் யூ.கே.சுமித் முன்மொழிவை உறுதிசெய்தார்.

எதிர்வரும் வாரங்களில் மக்களுக்கு தேவையான துரித நிவாரணங்களை பெற்றுக் கொடுப்பதற்கு முன்னெடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் தொடர்பில் விடயத்திற்கு பொறுப்பான அமைச்சர்களினால் தெளிவுபடுத்தப்பட்டது.

ஒருசில வாரங்களுக்குள் எரிபொருள் மற்றும் மின்தடை பிரச்சினைகளை தீர்ப்பதற்கான நடவடிக்கைகளை முன்னெடுத்திருப்பதாக இதன்போது கருத்து தெரிவித்த வலுசக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்தார்.

அதேபோன்று எரிவாயு (கேஸ்) பிரச்சினையையும் ஒருசில வாரங்களுக்குள் தீர்க்க முடியும் என கல்வி மற்றும் பெருந்தோட்ட அமைச்சர் ரமேஷ் பதிரன இதன்போது குறிப்பிட்டார்.

தற்போது ஏற்பட்டுள்ள நிலைமைக்கு மத்தியில் கட்சியின் சிரேஷ்ட உறுப்பினர்கள் அமைச்சுப் பதவிகளிலிருந்து வெளியேறி பெற்றுக்கொடுத்த ஆரதவிற்கு கட்சியின் சகல உறுப்பினர்களும் நன்றிகளை தெரிவித்தனர்.

புதிய அமைச்சர்கள் எதிர்கால நடவடிக்கைகளை வலுவாக முன்னெடுத்து செல்வதற்கு தேவையான ஒத்துழைப்பை பெற்றுக்கொடுப்பதாக உறுப்பினர்கள் இதன்போது குறிப்பிட்டனர்.

Related Articles

Latest Articles