மாகாணசபைத்தேர்தலில் கிழக்கு மாகாணத்தையும் கைப்பற்றப்போவதாக சபதமெடுத்துள்ள பஸில் ராஜபக்ச அதற்கான வியூகங்களை தற்போதிருந்தே வகுக்க ஆரம்பித்துள்ளார்.
ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவை உருவாக்கி குறுகிய காலப்பகுதிக்குள் மூன்று தேர்தல்களிலும் ‘ஹெட்ரிக்’ சாதனை புரிந்த பஸிலிடமே மாகாண தேர்தலையும் வழிநடத்தும் பொறுப்பு கையளிக்கப்பட்டுள்ளது.
வடக்கு, கிழக்கு தவிர்ந்த ஏனைய 7 மாகாணசபைகளையும் இலகுவில் வென்றுவிடலாம் என கணக்குபோட்டுள்ள பஸில் ராஜபக்ச, எப்படியாவது கிழக்கிலும் மொட்டு மலரவேண்டும் என்பதில் உறுதியாக இருக்கின்றார்.
இதற்காகமக்கள் மத்தியில் ஆதரவு பெற்ற தமிழ், முஸ்லிம் அரசியல்வாதிகளை அவர் குறிவைத்துள்ளார். சிலவேளை முஸ்லிம் காங்கிரஸ் உட்பட கிழக்கிலுள்ள சில கட்சிகளின் முக்கிய புள்ளிகளை அவர் வளைத்துபோடக்கூடும் என நம்பப்படுகின்றது. மத்தியில் ஆட்சி அதிகாரம் ராஜபக்சக்கள் வசம் இருப்பதால் பஸிலின் விரித்த வலையில் அவர்கள் இலகுவில் சிக்கக்கூடும் என எதிர்ப்பார்க்கப்படுகின்றது.
மறுபுறத்தில்கருணா, பிள்ளையான் அணிகள் தனித்து களமிறங்கினால்கூட மாகாணத்தில் ஆட்சியமைப்பதற்காக ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவுடன் சங்கமிக்ககூடும். அதாவுல்லாவின் தேசிய காங்கிரசும் ராஜபக்ச அணியுடனேயே அரசியல் பயணம் செய்கின்றது.
கிழக்கில் கூட்டமைப்பும், முஸ்லிம் காங்கிரசும் சங்கமித்தால் ஆட்சியமைப்பதில் நெருக்கடி ஏற்படலாம் என்பதால் இரு அணிகளையும் கூறுபோடும் தந்திரோபாய அரசியல் நகர்வுகளும் இடம்பெற்றுவருகின்றன.