சமுர்த்தி மற்றும் குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களுக்கு அரசாங்கம் வழங்க தீர்மானித்துள்ள 7,500 ரூபா கொடுப்பனவு மலையகத் தோட்டத் தொழிலாளர்களுக்கும் வழங்கப்பட வேண்டுமென வேலுசாமி இராதாகிருஷ்ணன் எம். பி சபையில் தெரிவித்தார்.
நாட்டு மக்கள் பெரும் கஷ்டங்களை அனுபவித்து வரும் இன்றைய காலகட்டத்தில் மலையகத் தோட்டத் தொழிலாளர்களும் தமது வாழ்வாதாரத்தை கொண்டு நடத்த முடியாமல் பெரும் கஷ்டங்களை அனுபவித்து வருவதாக சபையில் தெரிவித்த அவர், அவர்களின் விவசாய நடவடிக்கைகளும் பெரும் வீழ்ச்சியடைந்துள்ளதாகவும் தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் நேற்று நடைபெற்ற நாட்டின் தற்போதைய நெருக்கடி நிலை தொடர்பான விவாதத்தில் உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்
அது தொடர்பில் மேலும் தெரிவித்த அவர்,
மலையக பெருந்தோட்ட மக்கள் குறிப்பாக நுவரெலியா மாவட்ட மக்கள் சுற்றுலாத்துறையையும் விவசாயத்தையுமே பெரிதும் நம்பியுள்ளனர்.
இரண்டு துறைகளில் பெரும் வீழ்ச்சி கண்டுள்ளன. இதனால் அவர்கள் பெரும் கஷ்டங்களை அனுபவித்து வருகின்றனர். விவசாயத்தில் ஈடுபட்டுள்ள மக்கள் 25,000 ரூபா கொடுத்து உரம் வாங்க வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர்.
நுவரெலியா பகுதிக்கு சுற்றுலா பயணிகள் வருகை தராததால் அந்த துறையோடு சம்பந்தப்பட்ட அனைவரும் பெரும் பாதிப்பை எதிர்நோக்கியுள்ளனர்.தேயிலைத் துறையும் தற்போது பெரும் வீழ்ச்சி கண்டு வருகிறது. இந்த துறைகளின் முன்னேற்றத்துக்கு அரசாங்கம் சிறந்த வேலைத்திட்டங்களை நடைமுறைப்படுத்த வேண்டும் என்றும் அவர் அரசாங்கத்திடம் கேட்டுக்கொண்டார்.
