நுவரெலியா, கொத்மலை பிரதேச சபைக்கு உட்பட்ட வெதமுல்ல கிராம சேவகர் பிரிவு 474 எல் வெதமுல்ல தோட்டம் கெமினிதன் பிரிவிற்கு செல்லும் பிரதான பாதையே இது.
இந்த பாதையில் நாளாந்தம் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பயணித்து வருகின்றனர். இந்த தோட்ட பிரதேசத்தில் 500 ஏக்கருக்கு மேற்பட்ட காணியில் விவசாய நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்படுகின்றன.
ஆரம்ப பாடசாலை ஒன்றும் காணப்படுகின்றது. 166 குடும்பங்களை சேரந்த 750 மேற்பட்ட பொது மக்கள் வாழ்ந்து வருகின்றனர். அத்துடன் விவசாய செய்கைக்கு வெளி இடங்களில் இருந்து வந்து தற்காலிகமாக நூற்றுக்கு மேற்பட்டோர் வசித்து வருகின்றனர்.
மாணவரகள் ஆரம்ப மற்றும் உயர்நிலை கல்வி கற்பதற்கு இந்த தோட்டத்தில் இருந்து இறம்பொடை தமிழ் மகா வித்தியாலயம் உட்பட ஏனைய பாடசாலைகளுக்கு நாளாந்தம் மாணவர்கள் நடந்தும் லொரி மற்றும் தனியார் வாகனங்ளிலும் நடந்துமே செல்கின்றனர்.
இங்கு முறையான போக்குவரத்து சேவை இல்லை. தோட்ட பாடசாலைக்கு செல்லும் ஆசிரியர்களின் நிலமையும் இதுவே. இந்த பிரதேசம் மிகவும் குளிர்ந்த ஒரு கஷ்ட பிரதேசமாகும். கடல் மட்டத்தில் இருந்து 5000 அடிக்கு மேல் இந்த தோட்டம் காணப்படுகின்றது. நடந்து செல்லும் போது செங்குத்தான மலையில் 1200 படிகள் ஏற வேண்டும்.
நுவரெலியா கண்டி பிரதான பாதையில் வெதமுல்ல சந்தியில் இருந்து வெதமுல்ல தோட்டம் கயிர்கட்டி தோட்டம் ஊடாக இந்த கெமினிதன் தோட்டத்திற்கு செல்ல 11 கிலோமீற்றர் தூரம் காணப்படுகின்றது. இந்த பாதையின் இடையிடையே குறிப்பிட்ட தூரம் மலையக அரசியல் பிரமுகர்களின் பங்களிப்பு ஊடாக செப்பனிடபட்டாலும் பெருமளலாவான பாதை இன்னமும் திருத்தப்படாமல் காணப்படுகின்றது.
இங்குள்ள மக்கள் தங்களின் அபிருத்திகளுக்காக முன்னெடுக்கப்படும் அனைத்து செயற்பாடுகளுக்கும் பாதை அவலம் ஒரு தடையாக இருக்கின்றது. தங்களது வீடுகளை கூட கட்டிக் கொள்ள முடியவி;ல்லை. அதற்கான மூலப்பொருட்களை கொண்டு செல்வதிலும் அதற்கான செலவும் அதிகமாக இருக்கின்றது.
இந்த பாதை அவலம் காரணமாக தோட்ட பொது மக்கள் பாடசாலை மாணவர்கள் விவசாயிகள் பெரிதும் பாதிப்படைந்து வருகின்றனர். விவசாயிகளின் விவசாய உற்பத்திகளுக்கு உற்பத்தி செலவும் உற்பத்திகளை வினியோகிக்க சந்தைப்படுத்தும் செலவும் அதிகரித்து வருகின்றது. இதனால் விவசாயிகளும் பாதிப்படைந்து வருகின்றனர். விவசாய செயற்பாடுகளுக்கு வாகனங்களை பயன்படுத்த முடியாத நிலையும் தோன்றி உள்ளது. அதற்கான செலவும் அதிகம்.
தோட்ட தொழிலாளர்கள் தங்கள் வருமானத்தை அதிகரித்து கொள்வதற்காக விவசாய நடவடிக்கைகளில் ஈடுபட்டாலும் அதில் அவர்களுக்கு போதிய வருமானம் இல்லை. மக்கள் நாளாந்தம் தங்களின் வைத்திய சேவைகளை பெற்றுக் கொள்வதற்காகவும் அவசர தேவைகளின் போதும் இந்த பாதையையே பாவித்து வருகின்றனர். இதனால் கர்பினி பெண்கள் வயோதிபர்கள் பெரிதும் பாதிப்படைகின்றனர். இந் நிலையில் இந்த பாதையை சரி செய்து கொடுத்து இந்த மக்களின் சுபீட்சத்திற்கு வழி சமைத்து கொடுக்க வேண்டியது பொறுப்பானவர்களின் கடமையாகும்.
மக்கள் செய்தியாளர் – பா. திருஞானம்