அரசின் மக்கள் நல திட்டங்களுக்கு ஒத்துழைப்போம் – எம்.பி.இராதாகிருஷ்ணன் தெரிவிப்பு

பிரதமர் ரணில் விக்கிரமசிங்க உள்ளடங்கலான புதிய அரசில் இணைந்து, எவ்வித பதவிகளையும் ஏற்காதிருக்க மலையக மக்கள் முன்னணி தீர்மானித்துள்ளது.

அரசில் இணையுமாறும், அமைச்சு பதவியை ஏற்குமாறும் மலையக மக்கள் முன்னணிக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில் இவ்விவகாரம் தொடர்பில் ஆராய்ந்து முடிவொன்றை எடுப்பதற்காக முன்னணியின் மத்திய குழுக் கூட்டம், அட்டனில் உள்ள கட்சி தலைமையகத்தில், முன்னணியின் தலைவர் வீ. இராதாகிருஷ்ணன் தலைமையில் இன்று (15.05.2022) நடைபெற்றது.

மத்திய மற்றும் செயற்குழு உறுப்பினர்களிடம், சமகால அரசியல் நிலவரம் மற்றும் தற்போது கட்சி கையாள வேண்டிய நகர்வுகள் சம்பந்தமாக கருத்துகள் பெறப்பட்டன.

இவ்வாறு கருத்துகள் பெறப்பட்ட பின்னர், தமிழ் முற்போக்கு கூட்டணியாக, ஐக்கிய மக்கள் சக்தியுடன் தொடர்ந்து பயணிக்க வேண்டும் எனவும், புதிய அரசில் எவ்வித பதவிகளையும் ஏறக்கக்கூடாதெனவும் தீர்மானிக்கப்பட்டது.

கட்சியால் எடுக்கப்பட்ட இந்த முடிவு முன்னணியின் தலைவரால் ஊடகங்களுக்கு அறிவிக்கப்பட்டது.

” நாட்டு மக்களுக்கு எவ்வித தடையுமின்றி எரிபொருள், சமையல் எரிவாயு உட்பட அத்தியாவசிய சேவைகள் வழங்கப்பட வேண்டும். பொருட்களின் விலைகள் குறைக்கப்பட வேண்டும். தொழிலாளர்களுக்கான சம்பள உயர்வு வழங்கப்பட வேண்டும். இதற்காக அரசால் முன்னெடுக்கப்படும் வேலைத்திட்டங்களுக்கு ஒத்துழைப்பு வழங்கப்படும்.

மேலும் இந்த கூட்டத்தில் எடுக்கப்பட்ட தீர்மானம் வன்முறையில் ஈடுப்பட்ட அணைவரையும் உடனடியாக கைது செய்து முறையான விசாரணை முன்னெடுக்கப்பட வேண்டும். அகிம்சை போராட்டத்தில் ஈடுப்பட்டவர்களை தாக்க திட்டமிட்ட அணைவரையும் அவர்களுடைய தனிப்பட்ட தகுதி தராதரம் பார்க்காது கைது செய்து சட்டத்தின் முன் கொண்டு செல்ல வேண்டும்.

ஜனநாயகத்திற்காகவும் உண்மையை வெளிக் கொண்டு வருவதற்காகவும் போராடிய ரஞ்சன் ராமநாயக்கவிற்கு பிரதமர், ஜனாதிபதிக்கு ஆவணம் செய்து பொது மன்னிப்பு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
பெருந்தோட்ட மக்களின் பொருளாதாரத்தை கட்டியெழுப்ப உடனடியாக விசேட வேலைத்திட்டம் ஒன்றை உருவாக்க வேண்டும். ” – என்றார்.

Related Articles

Latest Articles