சர்வதேச நாணய நிதியத்தின் உதவியைப் பெற அரசினால் பேச்சுகள் நடக்கும் இவ்வேளையில் தொழிலாளர்களைப் பாதிக்கும் நிபந்தனைகளை விதித்தால் அதனை ஏற்றுக்கொள்வதில் இருந்து அரசு தவிர்ந்துகொள்ள வேண்டும் என இலங்கை தொழிலாளர் செங்கொடிச்சங்கம் தெரிவித்துள்ளது.
நாட்டின் பொருளாதாரப் பிச்சினைக்கு சர்வதேச நாணய நிதியத்தை நாடுவது தொடர்பாக இலங்கை தொழிலாளர் செங்கொடிச்சங்கம் கண்டியில் நடத்திய ஊடக சந்திப்பிலே இவ்வாறு தெரிவித்துள்ளது.
இலங்கை தொழிலாளர் செங்கொடிச் சங்கத்தின் செயலாளர் திருமதி. ஆனந்தி சிவசுப்ரமணியம் இது பற்றி மேலும் கூறுகையில், –
பெருந் தோட்டத்துறைத் தொழிலாளர்கள் உட்பட நாட்டில் உள்ள ஏனைய தொழிலாளர்களுக்கு பாதிப்பு ஏற்படும் வகையில் சர்வதேச நாணய நிதியம் ஏதும் நிபந்தனைகளை முன் வைத்தால் அதனை ஏற்றுக் கொள்ளக் கூடாது. இலங்கையில் தற்போது ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடிக்கு சர்வதே நாணய நிதியம் (ஐ.எம்.எப்) மட்டும்தான் தீர்வு என்ற நிலைப்பாட்டில் இல்லாது வேறு மாற்றுவழிகளையும் பற்றி சிந்திக்க வேண்டும்.
ஏனெனில் எப்போதும் ஒரு நிறுவனம் கடன் அல்லது உதவிகள் வழங்கும் போது நிபந்தனைகளை விதிப்பதுண்டு. அந்த அடிப்படையில் சர்வதேச நாயண நிதியமும் நிபந்தனைகளை விதிப்பது சாதாரண விடயம். அது தொழிலாளர் வர்க்கத்தை பாதிக்கும் வகையில் அமையக் கூடாது. அப்படி தொழிலாளர்களை பாதிக்கும் வகையில் நிபந்தனைகள் விதிக்கப்படின் அவற்றை ஏற்றுக் கொள்ளக் கூடாது. மாறாக அத்தகைய நிபந்தனைகள் முன்வைக்கப்பட்டால் தொழில் சங்கங்களுடன் கலந்துரையாட வேண்டும் எனவும் அவர் தெரிவித்தார். கடந்த கால அனுபவங்களைப் பொருத்த வரை சர்வதேச நாணய நிதியம் அவ்வாறு நிபந்தனைகள் விதிக்கப்பட்ட சந்தர்ப்பங்கள் இல்லாமல் இல்லை. அதேநேரம் நாட்டில் தற்போதைய கொந்தளிப்பை தனிக்க முற்படும் போது தொழிலாளர் உரிமைகளை பாதுக்காக்கும் ஆட்சியாளர்கள் வசம் நிர்வாகம் மாறவேண்டும்.
ஒரு நாட்டை நிர்வகிக்க பல்வேறு வரிகள் தேவை. அதற்காக செல்வந்தர்களிடம் வரி விதிப்பது தவறில்லை. அதற்காக மறைமுக வரிகளைக் கொண்டு வந்து சாதாரண பொதுமக்களையோ தொழிலாளர்களையோ பாதிக்கும் வகையில் அது அமையக் கூடாது என்றார்.