106 வர்த்தகர்களுக்கு எதிராக நுவரெலியா

நுவரெலியா மாவட்டத்தில் கடந்த நான்கு மாதத்தில் 12 இலட்ச ரூபா தண்டப்பனமாக அறவிடப்பட்டுள்ளதாக நுவரெலியா பாதுகாப்பு நுகர்வோர் அதிகாரசபையின் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

106 வர்த்தகர்களுக்கு எதிராக நுவரெலியா வலப்பனை ஹட்டன் நாவலப்பிட்டிய ஆகிய நீதிமன்றங்களில் வழக்கு தொடுக்கப்பட்டு இந்த தண்டப்பணம் அறவிடப்பட்டுள்ளது.அதிக விலைக்கு பொருட்களை விற்பனை செய்தமை உட்பட்ட குற்றச்சாட்டுகளுக்காகவே வர்த்தகர்கள் மீது வழங்கு தாக்கல் செய்யப்பட்டது.

இது தொடர்பாக அவரிடம் வினவியபொழுது.

நுவரெலியா மாவட்டத்தில் நுகர்வோர் பாதுகாப்பு அதிகார சபையை பொறுத்த அளவில் நாங்கள் தொடர்ச்சியாக சோதனைகளில் ஈடுபட்டுவருகின்றோம்.எங்களுக்கு பொது மக்களிடம் இருந்து தொடர்ந்தும் புகார்கள் கிடைத்த வண்ணமே உள்ளன.

அதிலும் குறிப்பாக தற்பொழுது நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி காரணமாக சில வர்த்தகர்கள் பொருட்களை அதிக விலைக்கு விற்பது தொடர்பாக பொது மக்கள் புகார் அளித்து வருகின்றனர்.எனவே நாங்கள் அதிகார சபை என்ற வகையில் பொது மக்களின் நலனை கருத்தில் கொண்டு செயற்படுகின்றோம்.

நுவரெலியா மாவட்டத்தில் கடந்த ஜனவரி மாதம் முதல் ஏப்ரல் மாதம் வரை 106 வர்த்தகர்களுக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்யப்பட்டிருக்கின்றது.குறிப்பாக அத்தியாவசி பொருட்களை விற்பனை செய்கின்ற சில்லரை வியாபாரிகள் மொத்த வியாபாரிகளுக்கு எதிராகவே அதிக வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.மேலும் விவசாயத்திற்காக பாவிக்கப்படுகின்ற உரம் கிருமிநாசினிகளை விற்பனை செய்கின்ற வியாபாரிகள் மருந்தகங்கள் எரிவாயு விற்பனையாளர்கள் போன்ற வர்த்தகர்களுக்கு எதிராகவே அதிகமான வழங்குகள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.

மேலும் அண்மையில் கினிகத்தேனை பகுதியில் எரிவாயு சிலின்டர்களை பதுக்கிவைத்திருந்த ஒரு முகவர் தொடர்பாக கிடைக்கப்பெற்ற தகவல் ஒன்றின் அடிப்படையில் குறித்த முகவரின் இல்லத்தை முற்றுகையிட்ட பொழது அவரிடம் இருந்து 230 ஏரிவாயு சிலின்டர்கள் கைப்பற்றப்பட்டன.அதில் 12.5 கிலோ எடையுடைய 177 சிலின்டர்களும் 5 கிலோ எடை கொண்ட 28 சிலின்டர்களும் 2.3 கிலோ எடை கொண்ட 25 சிலின்டர்களும் பதுக்கிவைக்கப்பட்டிருந்த நிலையின் கண்டுபிடிக்கப்பட்டது.

இதனை தொடர்ந்து அந்த அனைத்து எரிவாயு சிலின்டர்களையும் எங்களுடைய பொறுப்பில் எடுத்து கினிகத்தேனை பொலிஸ் நிலையத்தில் வைத்து பொது மக்களுக்கு விற்பனை செய்யப்பட்டது.அதன் மூலம் கிடைத்த 532789 ரூபாவை அரசாங்கத்தின் நிதியில் வைப்பிலிடப்பட்டதுடன் குறித்த முகவருக்கு 10000 ரூபா தண்டப்பனமும் அறவிடப்பட்டது.

 

இதன் மூலம் கடந்த நான்கு மாத காலப்பகுதியில் 106 வர்த்தகர்களுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட வழக்கின் மூலமாக 12 இலட்ச ரூபா தண்டப்பணமாக அறிவிடப்பட்டதுடன் 532789 ரூபா அரச நிதியாக பெற்றுக் கொள்ளப்பட்டுள்ளது.

நுவரெலியா மாவட்ட நுகர்வோர் பாதுகாப்பு அதிகார சபையை பொறுத்த அளவில் நாங்கள் தொடர்ச்சியாக சோதனைகளில் ஈடுபட்டு வருகின்றோம்.இது தொடர்பான புகார்களை எங்களுடைய காரியாலயத்துடன் 052-2223933 என்று என்னுடன் தொடர்பு கொண்டோ அல்லது அவசர அழைப்பான 1977 என்ற இலக்கத்துடன் தொடர்பு கொண்டோ தகவல்களை வழங்க முடியும்.

 

(எஸ்.தியாகு)

 

Related Articles

Latest Articles