போராட்டத்தில் ஈடுபட்ட பல்கலைக்கழக மாணவ ஒன்றியத்தின் மீது பொலிஸார் கண்ணீர் புகை தாக்குதல்

பல்கலைக்கழகங்களுக்கு இடையிலான மாணவர் ஒன்றியம் முன்னெடுத்துள்ள ஆர்ப்பாட்டத்தின் மீது பொலிஸார் கண்ணீர்ப்புகைப் பிரயோகம் மற்றும் நீர்த்தாரைப் பிரயோகத்தை மேற்கொண்டுள்ளனர்.

கொழும்பு – காலி வீதியில் அமைந்துள்ள உலக வர்த்தக மையத்திற்கு அருகில் இவ்வாறு கண்ணீர்ப்புகைப் பிரயோகம் மற்றும் நீர்த்தாரைப் பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

முன்னதாக, கொழும்பு கோட்டை பிரதேசத்தின் பல்வேறு வீதிகளிலும் உள்நுழைய பல்கலைக்கழகங்களுக்கு இடையிலான மாணவர் ஒன்றியத்துக்கு தடை விதிக்கப்பட்டிருந்தது.

இதற்கமைய யோர்க் வீதி,  மற்றும் ஜனாதிபதி மாவத்தை ஆகிய வீதிகளில் பிரவேசிப்பதற்கும், பொதுச் சொத்துக்களுக்கு சேதம் ஏற்படுத்துவதற்கும் கோட்டை நீதவான் நீதிமன்றம் தடை விதித்திருந்தது.

கொழும்பு பல்கலைக்கழகத்தின் கலைப்பீடத்துக்கு அருகாமையில் இருந்து பல்கலைக்கழகங்களுக்கு இடையிலான மாணவர் ஒன்றியம் இன்று பிற்பகல் முன்னெடுத்த ஆர்ப்பாட்டம் தொடர்பில் பொலிஸார் குறித்த மனுவை தாக்கல் செய்திருந்தனர்.

‘கோட்டா – ரணில் சதிப்புரட்சி அரசாங்கத்தை விரட்டியடிப்போம், செயன்முறையை மாற்றுவோம்’ எனும் தொனிப்பொருளில் பல்கலைக்கழகங்களுக்கு இடையிலான மாணவர் ஒன்றியம் குறித்த ஆர்ப்பாட்டத்தை முன்னெடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Related Articles

Latest Articles