நுவரெலியா மாவட்டம் வலப்பனை பிரதேச சபைக்கு உட்பட்ட இராகலை பிரதேச தோட்டப்பகுதிகளில் இயங்கி வந்த தோட்ட வைத்தியசாலைகளின் செயற்பாடுகள் குறைந்து வருவதுடன் சில தோட்டப்பகுதிகளில் வைத்திய சேவைகள் நிறுத்தப்பட்டும் வருகிறது.
இது திட்டமிட்ட செயல் என்ற கேள்வி தற்போது எழுந்துள்ளதாக வலப்பனை பிரதேச சபையின் தேசிய தொழிலாளர் முன்னணி உறுப்பினர் பெருமாள் சண்முகம் தெரிவித்தார்.
இது தொடர்பாக அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது.
கடந்த சில மாதங்களாக இராகலை பிரதேசத்தில் தோட்டங்களில் முறையாக முன்னெடுக்கப்பட்டு வந்த தோட்ட வைத்தியசாலைகளின் வைத்திய சேவை செயற்பாடுகள் குறைந்தும் பின் முற்றாக நிறுத்தப்பட்டும் வருகிறது. இதன் காரணமாக தோட்டத் தொழிலாளர்கள் தோட்ட வைத்தியசாலைகள் ஊடாக பெற்றுக்கொள்ள கூடிய வைத்திய சேவைகள் உள்ளிட்ட பிறப்பு,இறப்பு தொடர்பான ஆவணங்களை பெற்றுக்கொள்வதில் பாரிய சிரமங்களை எதிர் கொண்டு வருகின்றனர்.
அதனடிப்படையில் இராகலை மத்திய பிரிவு தோட்டம், சென் லெனாட்ஸ் தோட்டம்,லிடேஸ்டல் தோட்டம்,டெல்மார் தோட்டம் மற்றும் ஹைபொரஸ்ட் தோட்ட மக்கள் தோட்ட வைத்திய சேவைகளை பெற்றுக் கொள்வதில் நாள்தோரும் பிரச்சினைகளை அனுபவிக்கின்றனர்.
அத்தோடு இராகலை நடுக்கணக்கு தோட்டத்தில் புனரமைக்கப்பட்டுள்ள மகப்பேற்று வைத்தியசாலை கட்டடத்தில் கர்ப்பிணி தாய்மார்களுக்கு சிகிச்சை அளிப்பதும் நிறுத்தப்பட்டுள்ளது.
மாறாக மாதாந்த பரிசோதனைகள் மாத்திரம் இடம்பெறுவதுடன் இக்கட்டடத்தின் பிள்ளை பேறு அறைகள் கிராம சேவகர், சமுர்த்தி உத்தியோகஸ்தர் காரியாலயங்களாக மாறியுள்ளன.
இதனால் தோட்டத்தில் கர்ப்பிணித் தாய்மார்கள் பாரிய அளவில் போக்குவரத்துக்கு, பண விரயம் செய்து மாவட்ட மற்றும் பிரதேச வைத்தியசாலை நாடியே தமது வைத்திய சேவையை பெற்றுக்கொள்ள வேண்டியுள்ளதாக அவர் தெரிவித்தார்.
இது தொடர்பில் சம்பந்தப்பட்டவர்கள் விரைவில் கவனம் எடுக்குமாறும் கோட்டு கேட்டுக் கொள்ளப்படுகிறது.










