மத்திய மாகாணத்தில் 100,000 வீட்டுத்தோட்டங்களை பயிரிடும் வேலைத்திட்டம் மாகாண விவசாய அமைச்சினால் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக மத்திய மாகாண ஆளுநர் லலித் யூ கமகே தெரிவித்தார்.
மாகாண உணவுப் பாதுகாப்புத் திட்டம் தொடர்பான மத்திய மாகாண ஆளுநர் அலுவலக கேட்போர் கூடத்தில் நடைபெற்ற விசேட கூட்டத்திலேயே ஆளுநர் இந்தக் கருத்துக்களை வெளியிட்டார்.
உயர் அதிகாரிகள் பலர் கலந்துகொண்ட இந்தக் கூட்டத்தில் மத்திய மாகாணத்தில் உணவு பாதுகாப்பை உருவாக்கும் நோக்கில் இந்த விசேட வேலைத்திட்டம் நடைமுறைப்படுத்த திட்டமிடப்பட்டுள்ளதாக ஆளுநர் தெரிவித்தார்
இதற்காக பல்வேறு குழுக்கள் அமைக்கப்பட்டன. உணவுப் பாதுகாப்பு நிகழ்ச்சித்திட்டத்தை மாகாணத்தில் நடத்துவதற்கு மாகாணக் குழுவொன்றும் அமைக்கப்பட்டது,
மூன்று மாவட்டங்களுக்கும் மாவட்டச் செயலாளர்கள் தலைமையில் மற்றும் மூன்று மாவட்டக் குழுக்களும் அமைக்கப்பட வேண்டும் என அங்கு தீர்மானிக்கப்பட்டது. மேலும், பிரதேச செயலக மட்டத்தில் முன்னெடுக்கப்படும் வேலைத்திட்டங்களை ஒருங்கிணைக்கும் வகையில் பிரதேச செயலாளர்கள் தலைமையில் குழுக்களையும், கிராம உத்தியோகத்தர்கள் தலைமையில் கிராமிய குழுக்களையும் அமைப்பதற்கும் தீர்மானிக்கப்பட்டது.










