நுவரெலியா மாவட்டத்திலிருந்து தெரிவுசெய்யப்பட்ட 54 பாடசாலைகளில் சுமார் 6 ஆயிரத்து 200 சிறார்களுக்கு சத்துணவு வழங்கும் வேலைத்திட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது.
‘வேல்ட் விசன்’ உள்ளிட்ட அரச சார்பற்ற நிறுவனங்களின் பங்களிப்புடன் அடுத்தவாரம் முதல் இத்திட்டம் அமுலுக்குவரும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
லிந்துலை சுகாதார வைத்திய அதிகாரி ரிஷினி இந்த தகவலை வெளியிட்டார்.
கொரோனா பெருந்தொற்று, அதன்பின்னர் ஏற்பட்ட நெருக்கடி நிலை, தற்போதைய பொருளாதார நெருக்கடியால் மந்தபோசனை பிரச்சினையும் தலைதூக்கியுள்ளது. சத்துணவு மற்றும் சுகாதார போஷாக்கு உணவுகள் மாணவர்களுக்கு வழங்கப்படாததால் மந்தபோசனை நிலைமை அதிகரித்துள்ளது.

இந்நிலையிலேயே மாணவர்களின் சுகாதார நலன் மற்றும் மூளை வளர்ச்சியை கருதி, சத்துணவு திட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது.
இதற்கான விசேட கலந்துரையாடல் தலவாக்கலை தமிழ் மகா வித்தியாலயத்தில் நடைபெற்றது. மத்திய மாகாண சுகாதார, கல்வி அதிகாரிகள், வலய கல்வி பணிப்பாளர்கள் உள்ளிட்டவர்கள் சந்திப்பில் பங்கேற்றிருந்தனர்.
இதன்போது கர்ப்பிணி தாய்மார் மற்றும் மாணவர்கள் மத்தியில் நிலவும் போஷாக்கு குறைப்பாடு மற்றும் சத்துணவு வழங்க வேண்டியதன் முக்கியத்துவம் குறித்து சுகாதார வைத்திய அதிகாரி ரிஷினி விளக்கமளித்தார்.
அதேவேளை, லிந்துலை சுகாதார பிரிவில் உள்ள கர்ப்பிண தாய்மார்கள் மற்றும் முள்பள்ளி சிறார்களுக்கும் போஷாக்கு உணவு வழங்கும் வேலைத்திட்டமும் ஆரம்பமாகியுள்ளது.












