பாகிஸ்தானில் அதிகரித்துவரும் பொருளாதார நெருக்கடி

பாகிஸ்தானின் பொருளாதார நிலை மோசமடைந்து வருவதால் அது சமூக அமைதியை குலைக்கக் கூடுமெனவும் அரசின் முன்னுக்குப் பின் முரணான கொள்கைகள் காரணமாக முதலீட்டாளர்கள் அதை தமக்கு சாதகமற்றதாகக் கொள்ள முடியுமெனவும் வர்த்தக சமூகம் கருத்து தெரிவித்துள்ளது.

பாகிஸ்தானுக்கென தொடர்ச்சியான பொருளாதாரக் கொள்கைகள் கிடையாது. அரசிடம் அரசியலுக்கென தனியான கொள்கைகளும் பொருளாதாரத்துக்கென தனியான கொள்கைகளும் இருக்க வேண்டும். அவ்வாறு அமையாவிட்டால் உள்ளுர் மற்றும் வெளிநாட்டு முதலீட்டாளர்களை அது பாதிக்கவே செய்யும் என்று பாகிஸ்தான் வர்த்தக மற்றும் கைத்தொழில் சம்மேளனத்தின் முன்னாள் உப தலைவர் சாதிக் ஃபையாஸ் மாகூன் தெரிவித்துள்ளார். பாகிஸ்தான் அரசு வங்கியின் வைப்புகளின் மீதான வட்டி 7.5 சதவீதமாக 2021இல் காணப்பட்டதாகவும் இது பத்து மாதங்களுக்கும் குறைவான காலப்பகுதியில் 15 சதவீதமான அதிகரிப்பைக் காட்டியிருப்பதாகவும் ‘டோன்’ பத்திரிகை தகவல் வெளியிட்டுள்ளது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு முதலீட்டாளர்கள் எப்போதுமே உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு வட்டி மற்றும் நாணயமாற்று வீதங்களிலேயே கரிசனையாக இருப்பார்கள். கட்டுப்பாடின்றி அவை ஏற்ற இறக்கம் காணுமானால் வெளிநாட்டு முதலீட்டாளர்கள் பாகிஸ்தானைத் தவிர்க்கவே செய்வார்கள் என மாகூன் குறிப்பிட்டிருப்பதாக அப்பத்திரிகை மேலும் சுட்டிக்காட்டியிருந்தது.

‘முதலீட்டாளர்கள் டொலர்களில் முதலீடு செய்து பாக். ரூபா வழியாக வருமானம் ஈட்டுபவர்கள். ரூபா மதிப்பு இறக்கம் காணும் நிலையில் இங்கே முதலீடு செய்ய தயக்கம் காட்டவே செய்வார்கள்’ என்று அவர் தெரிவித்துள்ளதோடு ஜூன் மாத பணவீக்கம் 21.32 சதவீதமாக அதிகரித்து இருப்பதாகவும் கடந்த 13 வருடங்களில் இதுவே உயர்பட்ச அதிகரிப்பு என்பதையும் கோடிட்டு காட்டியுள்ளார்.

Related Articles

Latest Articles