சீருடையுடன் வந்து பெற்றோல் பெற்ற முன்னாள் OIC கைது

எரிபொருளை நிரப்புவதற்காக வந்த முன்னாள் பிரதம பொலிஸ் அதிகாரியை விளக்கமறியலில் வைக்குமாறு கல்முனை நீதிவான் நீதிமன்று உத்தரவிட்டுள்ளது.

கடந்த 18 ஆம் திகதி மாலை அம்பாறை மாவட்டம் கல்முனை பகுதியில் உள்ள எரிபொருள் நிலையத்தில் எரிபொருள் நிரப்புவதற்காக மோட்டார் சைக்கிள் ஒன்றில் முன்னாள் பொலிஸ் அதிகாரியான அவர் வந்தபோது பொலிஸாரினால் கைது செய்யப்பட்டிருந்தார்.

இந்நிலையில் செவ்வாய்க்கிழமை(19) கல்முனை நீதிவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டபோது அவரை எதிர்வரும் வெள்ளிக்கிழமை (22) திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.

அண்மையில் மட்டக்களப்பு பகுதியில் வங்கி ஒன்றில் இடம்பெற்ற கொள்ளை ஒன்றிலும் அவர் சந்தேக நபராக இனங்காணப்பட்டு பொலிஸ் சேவையிலிருந்து இடைநீக்கம் செய்யப்பட்டிருந்தார்.

இந்நிலையில், கல்முனை பாண்டிருப்பு பகுதியை சேர்ந்த 56 வயதான சந்தேக நபரான இவர் எரிபொருள் நிரப்பும் நிலையங்களில் பொலிஸ் சீருடை தரித்து வந்து பல தடவை எரிபொருளை நிரப்பி சென்றதாக பொலிஸார் மேற்கொண்ட விசாரணையில் கைதாகியுள்ளார். அவர் மீது, அரச ஊழியர் போன்று நடமாடி சட்டவிரோதமாக பொலிஸ் சீருடையை அணிந்து செயற்பட்டமை போன்ற குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டுள்ளது.

சந்தேக நபர் பொலிஸ் சேவையிலிருந்து நீக்கப்பட்ட போதிலும் எவ்வாறு சீரூடைகளை பெற்று இவ்வாறு செயற்பட்டார் என்பது தொடர்பில் அம்பாறை மாவட்ட சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் தலைமையில் விசாரணைகள் இடம்பெற்று வருகின்றன.

Related Articles

Latest Articles