காலிமுகத்திடல் போராட்டத்தின் செயற்பாட்டாளரான அருட்தந்தை ஜீவந்த பீரிஸ் உயர்நீதிமன்றத்தில் இன்று அடிப்படை உரிமைகள் மனு ஒன்றைத் தாக்கல் செய்துள்ளார்.
தான் பொலிஸாரால் கைதுசெய்யப்படுவதைத் தடுப்பதற்கு, இடைக்காலத் தடை உத்தரவு பிறப்பிக்கக் கோரி அவர் இந்த மனுவைத் தாக்கல் செய்துள்ளார்.
இதேவேளை, ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வரும் அருட்தந்தை ஜீவந்த பீரிஸ் உள்ளிட்டோருக்கு எதிரான அடக்குமுறைக்கு எதிராக 1,640 அருட்தந்தை மற்றும் அருட்சகோதரிகள் அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளனர்.
கத்தோலிக்க மதகுருமார்கள் கையொப்பமிட்ட இந்தக் கூட்டறிக்கையில், அருட்தந்தை ஜீவந்த பீரிஸ் உள்ளிட்டோரைக் கைதுசெய்வதற்கான முயற்சிகள் குறித்து ஆழ்ந்த கவலையை வெளிப்படுத்தியுள்ளனர்.
இதேவேளை, இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச்செயலாளர் ஜோசப் ஸ்டாலின், அருட்தந்தை ஜீவந்த பீரிஸ், அனைத்துப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் ஏற்பாட்டாளர் வசந்த முதலிகே, ‘மாற்றத்துக்கான இளைஞர்கள்’ அமைப்பின் தேசிய அமைப்பாளர் லஹிரு வீரசேகர மற்றும் எரங்க குணசேகர உள்ளிட்ட 6 பேர் வெளிநாடு செல்வதைத் தடுக்கும் வகையில் கோட்டை நீதிவான் நீதிமன்றம் கடந்த 25 ஆம் திகதி தடை உத்தரவு பிறப்பித்துள்ளது.
பொலிஸ் தலைமையகத்துக்கு முன்பாகச் சட்டவிரோதமாகப் பொதுமக்களை ஒன்றுகூட்டி, அரச சொத்துக்களுக்குச் சேதம் விளைவித்தனர் என்ற குற்றச்சாட்டு மனு தொடர்பிலேயே நீதிமன்றம் இந்த உத்தரவைப் பிறப்பித்துள்ளது.










