எதிர்வரும் 2047ஆம் ஆண்டில் இந்தியா அபிவிருத்தி அடைந்த நாடாக உருவாகும் என இந்திய மக்களவையின் சபாநாயகர் ஒம் பிர்லா தெரிவித்துள்ளார்.
தென் அமெரிக்காவின் சிறிய நாடான சுரிநேம் நாட்டுக்கு இந்திய மக்களவை பிரதிநிதிகள் குழுவொன்று அதிகாரபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டுள்ளது.
இந்த விஜயத்திற்கு இந்திய பிரதிநிதிகள் குழுவிற்கு சபாநாயகர் பிர்லா தலைமை தாங்கினார். இந்தியா சுதந்திரம் பெற்று 100 ஆண்டுகள் கடக்கும் 2047ஆம் ஆண்டில் இந்தியா அபிவிருத்தி அடைந்த நாடாக மாற்றமடையும் என இதன்போது சபாநாயகர் பிர்லா தெரிவித்துள்ளார்.
இதற்கான செயல் திட்டத்தை இந்தியா கொண்டுள்ளது. அதற்கான நகர்வுகள் முன்னெடுக்கப்படும். என்று சுரிநேம் பாராளுமன்றத்தில் உரையாற்றிய போது சபாநாயகர் பிர்லா தெரிவித்துள்ளார்.
இந்திய சுதந்திர தின நிகழ்வில் உரையாற்றிய பிரதமர் நரேந்திர மோடி நூறாம் ஆண்டு சுதந்திர தின நிகழ்வில் இந்தியா அபிவிருத்தி அடைந்த நாடாக திகழும் என சூளுரைத்திருந்தார் என்பது நினைவூட்டத்தக்கது.

பிரதமர் மோடியின் கருத்தை உள்வாங்கிக் கொண்ட சபாநாயகர் பிர்லா அதனை விடவும் ஒரு படி மேலே சென்று இந்தியாவை அபிவிருத்தி அடைந்த நாடாக மாற்றும செயல்திட்டம் தயார் என குறிப்பிட்டுள்ளார்.
“2047ஆம் ஆண்டில் இந்தியாவை அபிவிருத்தி அடைந்த நாடாக மாற்றும் செயல் திட்டம் ஆயத்தமாக உள்ளது. அனைவரையும் உள்ளடக்கிய அபிவிருத்தியை எட்டுவதற்கு தடையாகவுள்ள பிரச்சினைகளுக்கு தீர்வு காணும் முனைப்புகள் ஏற்கனவே ஆரம்பிக்கப்பட்டுள்ளன” என பிர்லா கூறியுள்ளதாக மக்களவை செயலகம் அறிக்கை வெளியிட்டுள்ளது.
அத்துடன், பாராளுமன்ற ஜனநாயகத்தின் அவசியத்தை பிர்லா வலியுறுத்தியுள்ளார். மக்களின் வாழ்க்கையில் சமூக பொருளாதார மாற்றங்களை கொண்டு வருவதிலும் அவர்களின் அபிலாஷைகளை பூர்த்தி செய்வதிலும் முக்கிய வகிபாகத்தை வகிக்க பாராளுமன்றம் எதிர்பார்க்கின்றது. “இந்திய பாராளுமன்றத்தில் மக்களின் பிரச்சினைகள் குறித்த விவாதங்கள், கருத்தாடல்கள் ஊக்குவிக்கப்படுகின்றது. ஆக்கபூர்வமான விவாதங்கள் மற்றும் கருத்துப் பரிமாற்றங்களின் வெளிப்பாடாகவே காத்திரமான சட்டங்களாக உருவாகின்றன.” என குறிப்பிட்டுள்ளார்.
சுரிநேமிற்கும் இந்தியாவிற்கும் இடையிலான வரலாற்று மற்றும் நாடாளுமன்ற ரீதியலான உறவுகளை மேலும் வலுப்படுத்திக் கொள்ள வேண்டுமென அவர் வலிறுயுத்தியுள்ளார்.
சுரிநேம் பாராளுமன்றத்தின் தொழில்நுட்பம், பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் பணியாளர்களின் திறன்களை விருத்தி செய்வதன் மூலம் உறவுகளை வலுப்படுத்திக்கொள்ள முடியும் என குறிப்பிட்டுள்ளார்.
பாராளுமன்றத் தகவல்களை பரிமாறிக் கொள்வதற்கும், தகவல்களை பெறுவதற்குமான புரிந்துணர்வு உடன்படிக்கையொன்று கைச்சாத்திடப்பட்டுள்ளது. சுரிநேம் அமைச்சர்களுடன் பிர்லா தலைமையிலான இந்திய மக்களவை உறுப்பினர்கள் பேச்சுவார்த்தை நடாத்தியுள்ளனர்.
“நம்பகமான பங்குதாரர் மற்றும் பொறுப்புமிக்க நண்பனாக இந்தியா எப்பொழுதும் சுரிநேமுடன் உறவுகளைப் பேணும் என இந்த சந்திப்பில் பிர்லா உறுதிமொழி வழங்கியுள்ளார்.
இந்த விஜயத்தின் போது சுரிநேமில் வாழ்ந்து வரும் புலம்பெயர் இந்தியர்களுடன் சபாநாயகர் பிர்லா சந்திப்பு நடாத்தியுள்ளார்.
நாட்டின் சமூகப் பொருளாதார மேம்பாட்டிற்கு புலம்பெயர் இந்தியர்களின் வகிபாகம் எவ்வாறானது என்பது குறித்து இந்த சந்திப்பில் சபாநாயகர் பிர்லா தெளிவுபடுத்தியுள்ளார்.
