‘தமிழர்களின் காணிப்பிரச்சினைக்கு விரைவில் தீர்வு’ – ஜனாதிபதி உறுதி!

“வடக்கில் தமிழ் மக்களின் காணிப் பிரச்சினை, காணாமல்போனவர்கள் தொடர்பான பிரச்சினை ஆகியவற்றுக்குத் தீர்வு காண வேண்டும். அதிகாரப் பகிர்வின் சில அடிப்படைகள் குறித்தும் கவனம் செலுத்தப்பட வேண்டும்.”
என்று ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார்.

இரண்டாம் எலிசபெத் மகாராணியின் இறுதிச் சடங்கில் கலந்துகொள்ள பிரிட்டன் சென்ற ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கும் பிரிட்டன் வாழ் புலம்பெயர் இலங்கையர்களுக்கும் இடையில் நேற்றுப் பிற்பகல் சந்திப்பு நடைபெற்றது.

பிரிட்டனிலுள்ள இலங்கை உயர்ஸ்தானிகராலயத்தால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இந்தக் கூட்டத்தில் பிரிட்டன் வாழ் இலங்கை வர்த்தகர்கள், முதலீட்டாளர்கள், தொழில் வல்லுநர்கள் உட்பட பலரும் கலந்துகொண்டனர்.

வடக்கில் தமிழ் மக்களின் காணிப் பிரச்சினை, காணாமல்போனவர்கள் தொடர்பான பிரச்சினை, அவர்களுக்கு உரிய நட்டஈடு வழங்குவது தொடர்பில் எழுந்துள்ள பிரச்சினை என்பவற்றுக்குத் தீர்வு வழங்க வேண்டும். அதிகாரப் பகிர்வின் சில அடிப்படைகளைக் கவனிக்க வேண்டும்.

2018ஆம் ஆண்டு அரசமைப்பைத் திருத்த நாம் நடவடிக்கை எடுத்தபோது வடக்கு, கிழக்குக்கு வெளியில் உள்ள ஏழு முதலமைச்சர்களும் எதிர்க்கட்சித் தலைவரும் யோசனைகளை முன்வைத்தமை மகிழ்ச்சியளிக்கின்றது. வடக்கு, கிழக்கு நாடாளுமன்ற உறுப்பினர்களும், முதலமைச்சர்களும் அதற்கு உடன்பட்டுள்ளதால் எமக்கு அதனைத் தொடர முடியும். அதனை நிறைவேற்ற முடியும் என்றும் நம்புகின்றேன்.

நாம் அனைவரும் ஒன்றிணைந்து வளமான தேசமாக எமது நாட்டை மாற்ற வேண்டும். இங்கே வாழ்வதால் நீங்கள் வெற்றி அடைந்திருப்பீர்கள்.

இங்கு வாழும் சுமார் 5 இலட்சம் இலங்கையர்கள், தங்களை முதல் அல்லது இரண்டாம் தலைமுறை இலங்கையர்களாக அடையாளப்படுத்துகின்றனர். வெளிநாட்டில் வாழும் இலங்கையர்கள், புலம்பெயர் மக்களாக அழைக்கப்படுகின்றனர். புலம்பெயர் அலுவலகம் ஒன்றை ஆரம்பிப்பதற்கான பணி முன்னெடுக்கப்படுகிறது.

வெளிவிவகார அமைச்சு அதைச் செயற்படுத்தி வருகின்றது. அது ஜனாதிபதியின் அலுவலகத்தின் கீழ் இருக்கும். சில காலங்களின் பின்னர் அது வெளிவிவகார அமைச்சின் கீழ் கொண்டுவரப்படும். ஆனால், இந்த அலுவலகம் வெற்றிபெற வேண்டும் என்று நாங்கள் விரும்புகின்றோம். நாம் அனைவரும் இதில் கைகோர்க்க வேண்டும்.

வடக்கில் மட்டுமல்ல தெற்கிலும் முதலீடு செய்ய முடியும். உங்களில் சிலருக்கு தெற்கு அல்லது கிழக்கில் தொடர்புகள் இருக்கலாம். அவர்களுக்கு உதவியளிக்க விரும்பலாம். அதில் எந்தப் பிரச்சினையும் இல்லை. உங்களால் முடிந்த விதத்தில் இலங்கைக்கு உதவுங்கள் எனவும் ஜனாதிபதி குறிப்பிட்டார்.

Related Articles

Latest Articles