ஜனாதிபதியால் நியமிக்கப்பட்டுள்ள இரண்டு ஜனாதிபதி செயலனியிலும் சிறுபான்மை சமூகம் உள்வாங்கப்படாமையானது எங்களை ஒரம் கட்டுவதாகவே கருதவேண்டியுள்ளது.
எனவே வர்த்தமாணியில் திருத்தம் ஒன்றை கொண்டு வந்து சிறுபான்மை சமூகத்தை பிரதிநிதித்துவம் செய்வதற்கான ஏற்பாட்டை செய்ய வேண்டும் என மலையக மக்கள் முன்னணியின் தலைவரும் தமிழ் முற்போக்கு கூட்டணியின் பிரதி தலைவருமான வேலுசாமி இராதாகிருஸ்ணன் தெரிவித்துள்ளார்.
தமிழ் முற்போக்கு கூட்டணியின் தேர்தல் பிரசார கூட்டம் ஒன்று மஸ்கெலியா மவுசாகலை லக்சபான பகுதியில் இடம்பெற்றது.
இதில் கலந்து கொண்டு பேசும் பொழுதே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.இதன்போது மலையக மக்கள் முன்னணியின் முன்னாள் உறுப்பினர்கள் பலர் இதில் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.
தொடர்ந்து அவர் அங்கு கருத்து தெரிவிக்கையில்
அண்மையில் ஜனாதிபதியினால் கிழக்கு மாகாணத்திலுள்ள தொல் பொருள் மரபுரிமைகளை முகாமைத்துவம் செய்வதற்கான ஜனாதிபதி செயலனியும் பாதுகாப்பான நாடொன்று ஒழுக்க நெறியுள்ள குணநலன் கொண்ட மற்றும் சட்டத்தை மதிக்கும் சமூகம் ஒன்றை கட்டியெழுப்புவதற்கான செயலனி ஆகிய இரண்டு செயலனியிலும் அங்கம் வகிக்கின்றவர்களின் விபரம் தொடர்பான வர்த்தமாணி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.
இந்த இரண்டு செயலனியிலும் சிறுபான்மை சமூகங்களான தமிழர்களும் முஸ்லிம்களும் உள்வாங்கப்படாமையானது எங்கள் மத்தயில் பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
ஆனால் பிரதமர் மகிந்த ராஜபக்ச இரண்டு சிறுபான்மை சமூகத்தை சார்ந்தவர்களை நியமிப்பதாக கூறியிருந்த நிலையிலேயே இந்த வர்த்தமாணி அறிவித்தல் வெளியாகியுள்ளது.
இந்த வர்த்தமாணி அறிவித்தலை மீள் பரிசீலனை செய்து சிறுபான்மை சமூகங்களை பிரதிநதித்துவம் செய்கின்ற வகையில் அதனை வெளியிடுவதற்கு ஜனாதிபதி முன்வரவேண்டும்.
அதே நேரம் இது தொடர்டபாக டக்ளஸ் தேவானந்தா செயற்பட்டு வருவதையும் இந்த சந்தர்ப்பத்தில் பாராட்டுவதுடன் அனைத்து சிறுபான்மை சமூகங்களை சேர்ந்தவர்களும் ஒன்றினைந்து குரல் கொடுக்க முன்வரவேண்டும் எனவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.