” வெளியில் ஜனநாயகம் பற்றி பேசப்பட்டாலும், பல்கலைக்கழகத்துக்குள் மாணவச் சங்கங்களால் பாசிச வாதமே முன்னெடுக்கப்பட்டுவருகின்றது. இதற்கு பெயர் ஜனநாயகம் அல்ல.”
– இவ்வாறு பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் பிரமித்த பண்டார தென்னகோன் நாடாளுமன்றத்தில் நேற்று தெரிவித்தார்.
இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,
” எதிர்க்கட்சித் தலைவர் உள்ளிட்டவர்கள் ஜனநாயகம் பற்றி கதைக்கின்றனர், ஆனால் பல்கலைக்கழகத்துக்குள், மாணவச் சங்கங்களால் பாசிச வாதம், அடிப்படைவாதம், அச்சுறுத்தல், பாதாள குழு செயற்பாடே முன்னெடுக்கப்பட்டுவருகின்றது.
முதலாம் வருட வகுப்பு மாணவனுக்கு கடிகாரம் கட்ட முடியாது, அவ்வாறு கட்டினால் கால்கள் கட்டப்படுகின்றன. மாணவிகளுக்கு தோடு போட முடியாது, வெளிப்படையாக சொல்ல முடியாத பல வதைகளும் உள்ளன.
அதேபோல கோட்டாவை விரட்டிய, எங்களுக்கு உன்னை விரட்டுவது பெரிய விடயம் அல்ல என பீடாதிபதிக்கு எச்சரிக்கை விடுக்கபபட்டுள்ளது. பல்கலைக்கழக உபபேந்தர், பீடாதிபதிகள், பேராசிரியர்கள், விரிவுரையாளர்கள், மாணவர்கள், கல்விசாரா ஊழியர்களை பாதுகாக்க வேண்டிய பொறுப்பு எமக்கு உள்ளது.
வீதியில் இறங்கி போராட்டம் நடத்தி, தீ வைத்து கொளுத்தி, கொலை செய்துவிட்டு, நீதிமன்றில் முன்னிலையான பிறகு 24 மணிநேரத்துக்குள் பிணை கிடைப்பது ஜனநாயகம் அல்ல. சட்டம், ஒழுங்கு முறையாக இருந்தால்தான் எல்லாம் பாதுகாக்கப்படும்.” – என்றார்.










