” அச்சுறுத்தல்கள், வன்முறைகள் மற்றும் போராட்டங்கள் மூலம் எமது கட்சியின் அரசியல் பயணத்தை தடுத்துவிடமுடியாது. மக்களுடன் இணைந்து எமது எழுச்சி பயணம் முன்நோக்கி தொடரும்.”
இவ்வாறு ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் பதில் தேசிய அமைப்பாளர் நாமல் ராஜபக்ச சூளுரைத்துள்ளார்.
ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் புத்தளம், ஆராச்சிக்கட்டுவ தொகுதிக் கூட்டம், முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச தலைமையில் நேற்று நடைபெற்றது. இக்கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு சூளுரைத்தார்.
இது தொடர்பில் நாமல் ராஜபக்ச எம்.பி. மேலும் கூறியவை வருமாறு,
” அச்சுறுத்தல்கள் மற்றும் எதிர்ப்பு போராட்டங்கள் மூலமான அரசியலையே ஐக்கிய மக்கள் சக்தி மற்றும் ஜே.வி.பி. என்பன முன்னெடுத்துவருகின்றன. அக்கட்சியினர் போராட்டங்களை நடத்தினால் அது ஜனநாயகம். நாம் நடத்தினால் அது அடக்குமுறையாம். அவர்கள் உரையாற்றினால் அது கருத்து சுதந்திரமாம். நாங்கள் பேசினால், எதிரணிகளை இலக்கு வைத்த வேட்டையாம்.
ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன கூட்டங்களை நடத்தினால், அதற்கு எதிராக திட்டமிட்ட அடிப்படையில் போராட்டங்கள் நடத்தப்படுகின்றது. நாவலப்பிட்டியவில் அவ்வாறு நடைபெற்றது. மஹிந்த ராஜபக்ச கிராமத்திலிருந்து வந்த தலைவர். எனவே, கிராமங்களுக்கு வந்து, கிராம மக்களுடன் இணைந்த அவரின் பயணத்தை போராட்டங்கள் மூலம் தடுத்து விடமுடியாது.
எமது கட்சி எம்.பிக்களின் வீடுகளை கொளுத்தி, அவர்களை அச்சுறுத்தி எமது பயணத்தை தடுத்துவிடலாம் என எவரும் நினைத்துவிடக்கூடாது. எப்படியான சவால்கள் வந்தாலும் மக்களுடன் இணைந்து முன்னோக்கி பயணிப்போம்.” – என்றார்.
