வட்டவளை மௌன்ஜீன் தோட்டத்திற்கு செல்லும் பிரதான வீதிக்கு அருகிலுள்ள தேயிலை மலையில் குளவிக் கூடு கட்டியுள்ளமையால் தாம் பெரும் அச்சத்துடன் இருப்பதாக தோட்ட மக்கள் கவலைத்தெரிவிக்கின்றனர்.
எவ்வேளையிலும் குளவிக்கூடு கலைந்து வந்து தாக்கும் அபாயம் இருப்பதாக மக்கள் தெரிவிக்கின்றனர்.
இந்த வீதியானது வட்டவளை புகையிரத நிலையத்திற்கு செல்வதற்கான பிரதான பாதையுமாகும். அத்துடன் 1000 ற்கும் மேற்பட்ட மௌன்ஜீன் தோட்ட மக்கள் பிரதான பாதையாக இதை பயன்படுத்தி வருகின்றனர்.
பாடசாலை மாணவர்களும் இந்த வீதியின் ஊடாக தான் வட்டவளை, செனன், கடவலை,குயில்வத்த ஆகிய பாடசாலைகளுக்கு நடந்து சென்று வருகின்றனர். எனவே இக்குளவிக் கூடு பாடசாலை மாணவர்களுக்கும் ஆபத்தானதாக இருக்கின்றது. குளவிக்கூடு காரணமாக மாணவர்கள் இந்த வீதி வழியாக நடந்துசெல்ல அச்சமடைவதாக பெற்றோர் தெரிவிக்கின்றனர்.
தேயிலை செடிகள் இருக்கும் பகுதியில் குளவிக்கூடு கட்டியுள்ளமையால் அச்சத்துடன் தொழிலாளர்கள் கொழுந்து பறிக்கின்றனர். இதனால் தோட்ட மக்கள் பல்வேறு வகையிலும் அசௌகரியங்களை சந்தித்து வருகின்றனர். எனவே குளவிக் கூட்டினை அகற்றுவதற்கு சம்பந்தப்பட்ட தரப்பினர்கள் நடவடிக்கை எடுக்குமாறு தோட்ட மக்கள் கோரிக்கை முன்வைக்கின்றனர்.