2023 ஆம் நிதியாண்டுக்கான வரவு – செலவுத் திட்டத்தின் இரண்டாம் வாசிப்புமீதான வாக்கெடுப்பு இன்று மாலை 5 மணிக்கு நாடாளுமன்றத்தில் நடைபெறவுள்ளது.
இதன்போது பாதீட்டுக்கு எதிராக வாக்களிப்பதற்கு சஜித் பிரேமதாச தலைமையிலான ஐக்கிய மக்கள் சக்தி கூட்டணி (தமிழ் முற்போக்கு கூட்டணி, முஸ்லிம் காங்கிரஸ், மக்கள் காங்கிரஸ் உள்ளடங்களாக) தீர்மானித்துள்ளது.
அத்துடன், இரா. சம்பந்தன் தலைமையிலான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, அநுரகுமார திஸாநாயக்க தலைமையிலான தேசிய மக்கள் சக்தி, மைத்திரிபால சிறிசேன தலைமையிலான ஶ்ரீலங்கா சுதந்திரக்கட்சி, விமல் வீரவன்ச தலைமையிலான உத்தர லங்கா சபாகய, டலஸ் அழகப்பெரும தலைமையிலான சுதந்திர மக்கள் சபை என்பனவும் எதிராக வாக்களிக்கவுள்ளன.
ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன, ஐக்கிய தேசியக்கட்சி, ஈபிடிபி, தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சி, தேசிய காங்கிரஸ், முஸ்லிம் தேசியக் கூட்டணி உள்ளிட்ட கட்சிகள் அரச பங்காளிகள் பாதீட்டை ஆதரித்து வாக்களிக்கவுள்ளன.
பாதீட்டை நிறைவேற்றிக்கொள்வதற்கு நாடாளுமன்றத்தில் சாதாரண பெரும்பான்மை போதுமானதாக இருக்கும். அதற்குரிய ஆதரவை ஜனாதிபதி தலைமையிலான அரசு திரட்டியுள்ளது என தெரியவருகின்றது.
எனினும், சர்வக்கட்சி அரசமைப்பதற்காக ஜனாதிபதியால் முன்னெடுக்கப்பட்ட இறுதி முயற்சியும் தோல்வியில் முடிவடைந்துள்ளது. பாதீட்டுக்கு ஆதரவளித்து, சர்வக்கட்சி அரசமைப்பதற்கு பச்சைக்கொடி காட்டுமாறு ஜனாதிபதி தரப்பில் கோரிக்கை விடுக்கப்பட்டிருந்தது.
2023 ஆம் நிதியாண்டுக்கான பாதீட்டை நிதி அமைச்சர் என்ற வகையில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க கடந்த 14 ஆம் திகதி சபையில் முன்வைத்து உரையாற்றினார். 15 ஆம் திகதி முதல் இரணடாம் வாசிப்புமீதான விவாதம் ஆரம்பமானது. இன்று மாலை வாக்கெடுப்பு நடத்தப்படுகின்றது.
நாளை முதல் குழுநிலை விவாதம் (அமைச்சுகளுக்கான ஒதுக்கீடு) ஆரம்பமாகும். டிசம்பர் 8 ஆம் திகதி இறுதி வாக்கெடுப்பை நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.
