” பாதாளக் குழுக்களை ஒடுக்குதல் மற்றும் போதைப்பொருள் விற்பனையை தடுத்தல் போன்ற நடவடிக்கைகளுக்காக விசேட அதிரடிப்படையினரை (STF) முழுமையாக ஈடுபடுத்த திட்டமிடப்பட்டுள்ளது.” – என்று பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் எஸ். ஹெட்டியாராச்சி நேற்று தெரிவித்தார்.
இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,
” போதைப்பொருளுக்கு அடிமையானவர்களால் சிறைச்சாலை நிரம்பியுள்ளது. அத்துடன், ஐஸ் போதைப்பொருள் வைத்திருந்தால் மரண தண்டனை விதிக்கும் வகையில் தற்போது சட்டத்திருத்தமும் மேற்கொள்ளப்பட்டுள்ளது. எனவே, புனர்வாழ்வளிக்கும் வேலைத்திட்டத்தை விரைவுபடுத்த வேண்டியுள்ளது. போதைப்பொருளுக்கு அடிமையானவர்களை சிறைச்சாலைக்கு கொண்டுவராமல், அவர்களுக்கு புனர்வாழ்வளித்து சமூகமயப்படுத்தல் பற்றி கவனம் செலுத்த வேண்டியுள்ளது.
போதைப்பொருள் என்பது சர்வதேச வலைப்பின்னலுடன் தொடர்புபட்டது. பாதாளக்குழுக்களுடன் தொடர்புபட்டுள்ளன. இவற்றை கட்டுப்படுத்துவதென்பது இலகுவான விடயமல்ல. போதைப்பொருள் விவகாரம் தொடர்பில் விசேட அதிரடிப்படையினர் ஈடுபடுத்தப்பட்டுவருகின்றர்.
எதிர்காலத்தில் பாதாள குழுக்களை கட்டுப்படுத்தல் மற்றும் போதைப்பொருளை தடுத்தல் போன்ற பணிக்காக மட்டும் விசேட அதிரடிப்படை முழுமையாக ஈடுபடுத்தப்படும். இதன் முதற்கட்டமாக ஏனைய பணிகளில் இருந்து விசேட அதிரடிப்படையினர் விடுவிக்கப்படவுள்ளனர். 600 பேரை விசேட அதிரடிப்படைக்கு இணைத்துக்கொள்வதற்கு நடவடிக்கை எடுக்கப்படும்.” – என்றார்.