வருடாந்த ஸ்ரீ பாத யாத்திரை காலம் 2022/23 உந்துவப் பௌர்ணமி தினமான புதன்கிழமை (7) ஆரம்பமாகி 2023 மே மாதம் வெசாக் பௌர்ணமி வரை நீடிக்கும்.
புனித திருமஞ்சனம், திருவுருவப் பூச்சுகள் மற்றும் சிலைகள் அடங்கிய வாகனப் பேரணி பெல்மடுல்ல கல்பொத்தவல ஸ்ரீ பாத ரஜமஹா விகாரையில் இருந்து செவ்வாய்க்கிழமை (6) புறப்பட்டு மாலை நல்லதண்ணியை வந்தடைந்து, உந்துவப் பௌர்ணமி தினத்தன்று அதிகாலை அங்கிருந்து ஊர்வலமாக எடுத்துச் செல்லப்படும்.
மேலும் மூன்று ஊர்வலங்கள் எரத்ன, பலபத்கல மற்றும் பொகவந்தலாவ பாதைகள் ஊடாக வந்து ஹட்டன் பாதையில் இணையும்.
ஸ்ரீ பாத யாத்திரை காலத்துடன் தொடர்புடைய அனைத்து பாரம்பரிய பழக்கவழக்கங்கள் மற்றும் சடங்குகள் ஸ்ரீ பாதஸ்தானாதிபதி, சப்ரகமுவ பிரதம சங்கநாயகம் மற்றும் ஊவா வெல்லஸ்ஸ பல்கலைக்கழகத்தின் வேந்தரின் வழிகாட்டுதலின் கீழ் நடத்தப்படும்.
நுவரெலியா மற்றும் இரத்தினபுரி மாவட்ட செயலாளர்கள் பொலிஸார், பாதுகாப்பு தரப்பினர் மற்றும் அரச நிறுவனங்களின் உதவியுடன் யாத்திரிகர்களுக்கு வசதிகளையும் பாதுகாப்பையும் வழங்க நடவடிக்கை எடுத்துள்ளனர்.










