பதுளை மாவட்டத்தின் பசறை, லுனுகலை, மடுல்சீமை, நமுனுகுல உட்பட பல பகுதிகளில் நேற்று பிற்பகல் வேளைத் தொடக்கம் வீசி வரும் கடும் காற்றின் காரணமாக மக்கள் குடியிருப்புகள்,பாடசாலைகள், பொது கட்டிடங்கள் என பலவற்றிற்கு பலத்த சேதம் ஏற்பட்டுள்ளது.
காற்றின் காரணமாக பாரிய மரங்கள் வீதிகளிலும், வீடுகளிலும் விழுந்துள்ளன.காற்று தொடர்ந்து வீசுவதால் சேதம் அதிகரிக்கலாமென அஞ்சப்படுகின்றது.
லுனுகலை பிரதேச செயலகத்திற்குட்பட்ட ஹொப்டன் உட்பட பல பகுதிகளில் தோட்டத் தொழிலாளர் குடியிருப்புகள், பாடசாலைகள் என்பன பகுதி அளவிலும் முழுமையாகவும் சேதமடைந்தள்ளன.
இப்பகுதியில் ஏற்பட்ட சேதங்கள் தொடர்பாக நேரடி கள ஆய்வில் ஈடுபட்டுள்ளதாக பதுளை மாவட்ட அனர்த்த முகாமைத்துவ நிலையத்தின் உதவிப் பணிப்பாளர் ஈ.எம்.எல்.உதயகுமார தெரிவிக்கின்றார்.
இதேவேளை பசறை கல்வி வலயத்தில் அனர்த்த அபாயத்தை எதிர்நோக்கியுள்ள பாடசாலைகளுக்கு இன்று (08) முற்பகல் 11.00மணிக்கு விடுமுறை வழங்கி பாடசாலை மாணவர்களை பாதுகாப்பான முறையில் பெற்றோரிடம் ஒப்படைக்குமாறு ஊவா மாகாண கல்வி அமைச்சின் சிரேஷ்ட உதவி செயலாளர் டப்ளியூ.ரந்தெனிய பசறை வலயக் கல்விக் காரியாலயத்தின் பணிப்பாளருக்கு கடிதம் மூலம் அறிவித்துள்ளார்.










